கோலாலம்பூர், மார்ச் 20- முன்னாள் ம.சீ.ச. தலைவர் டத்தோஸ்ரீ ஓங் தி கியாட் (படம் – இடது) நேரடி வேட்பாளராக தேசிய முன்னணியில் நிறுத்தப்பட்டால் தற்போதைய தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுவா சோய் லெக் (முகப்பு படம்) பதவி விலகுவாரா?
தற்போது சிலாங்கூரிலுள்ள பாண்டான் தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஓங் தி கியாட் அந்த தொகுதியை மீண்டும் வெற்றி கொள்ளும் வகையில் அவரை நேரடி தேசிய முன்னணி வேட்பாளராக களம் இறக்க தேசிய முன்னணியின் தலைமைத்துவம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காரணம், ம.சீ.ச.வின் வேட்பாளர் பட்டியலில் ஓங் தி கியாட்டின் பெயர் விடுபட்டுள்ளது. அவருக்கும் மசீச தலைவம் சுவா சொய் லெக்குக்கும் இடையில் நீண்ட காலமாக இருந்து வரும் அரசியல் பிணக்கு காரணமாக அவரை ஒரு வேட்பாளராக சேர்த்துக் கொள்ள சுவா சொய் லெக் மறுத்து வருகின்றார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்துரைத்த சுவா சோய் லெக் அவ்வாறு தேசிய முன்னணி வேட்பாளராக ஓங் தி கியாட் நிறுத்தப்பட்டால் தனது பதவியை ராஜினாமா செய்வீர்களா? என்று கேட்டபோது அவர் அதை மறுக்கவோ உறுதிப்படுத்தவோ இல்லை.
தனக்கும் பிரதமருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தை மிகவும் ரகசியமானது என்றும் அதனால் அது குறித்த எந்த கேள்விக்கும் பதில் அளிக்க முடியாது என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
எனவே, தேசிய முன்னணியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சுவா சோய் லெக் பதவி விலகுவதற்கான சாத்தியங்களும் உள்ளன.
பாண்டான் தொகுதியின் மக்கள் கூட்டணி வேட்பாளராக பிகேஆர் கட்சியைச் சேர்ந்த ரபிசி ரம்லி அறிவிக்கப்பட்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.