சென்னை – முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து, அவர் வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் சசிகலாவை அமர வைத்து அழகு பார்க்க அதிமுக நிர்வாகிகள் தயாராகிவிட்டனர்.
கடந்த வாரமே தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உட்பட முக்கிய அமைச்சர்கள், சசிகலாவைச் சந்தித்து இது குறித்துக் கலந்தாலோசித்தனர்.சசிகலா தான் கட்சியின் பொதுச்செயலாளராகப் பதவி ஏற்க வேண்டும் என்று பன்னீர்செல்வமும் டுவிட்டரில் அறிவித்திருந்தார்.
ஆனால், அதிமுக-வின் தீவிரத் தொண்டர்களோ சசிகலாவை ஏற்கத் தயாராக இல்லை. இதனால் அதிமுக தொகுதிகளில் தொண்டர்களிடையே எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
அதோடு, எம்ஜிஆர் அமைத்த கட்சி விதிகளின் படி, சசிகலா பொதுச்செயலாளர் ஆவதற்கும் சிக்கல் உள்ளது என்பது தெரியவந்துள்ள நிலையில், சசிகலா தரப்பு பொதுமக்களுடன் விரோதமின்றி சுமூகமாக பதவியில் அமர பல வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
அதன் முதற்கட்டமாக, ஜெயலலிதாவும் அவரது தாயார் சந்தியாவும் வாங்கிய போயஸ் கார்டன் வீட்டை சட்டப்படி எந்த ஒரு சொந்தமும் கொண்டாட இயலாது என்பதால், அதனை ‘அம்மா நினைவகமாக’ மாற்றி, மக்களை சாந்தப்படுத்த சசிகலா தரப்பு யோசித்து வருவதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
அதற்கான சட்டப்பூர்வ வழிகள் குறித்து தற்போது ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகின்றது. எல்லாம் சரியாக இருந்தால் விரைவில் போயஸ் கார்டன் ‘வேதா இல்லத்தை’ ‘அம்மா நினைவகமாக’ அறிவிப்பார்கள் என்கின்றனர் அதிமுக முக்கிய நிர்வாகிகள்.