கோலாலம்பூர் – மலேசிய விமானப் படையில் மலாய்க்காரர் அல்லாதோருக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை விமானப்படைத் தலைமை ஜெனரல் டான்ஸ்ரீ ரோஸ்லான் சாட் மறுத்துள்ளார்.
ஆகாயப்படைக்கு ஆள்சேர்க்கும் போது, மலாய்க்காரர் அல்லாதோரிடமிருந்து 10 விழுக்காட்டிற்கு குறைவான விண்ணப்பங்களே வருவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
“மலாய்க்காரர் அல்லாதோரை பணியில் அமர்த்துவதில்லை என்பது தவறு. காரணம் வெகு சிலரே அப்பணியில் சேர முன் வருகின்றனர். இது ஒரு கவலையளிக்கும் போக்கு. மலாய்க்காரர் அல்லாதோரில் மிகக்குறைவானவர்களே ஆர்வம் காட்டுகின்றனர்.” என்று ரோஸ்லான் தெரிவித்துள்ளார்.
எனினும், சபா, சரவாக்கில் இந்த நிலை இல்லை என்றும் ரோஸ்லான் குறிப்பிட்டுள்ளார்.
“விமானப்படையில் சேரத் தகுதிவாய்ந்த அனைத்து இனத்தைச் சேர்ந்தவர்களையும் வரவேற்கிறோம். ஆர்எம்ஏஎஃப் (RMAF) அவர்களுக்கு வான்வழித்துறையில் சிறந்து விளங்கும் வாய்ப்பை அளிக்கின்றது” என்று ரோஸ்லான் தெரிவித்துள்ளார்.