சென்னை – கடந்த 3 மாதங்களாக சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனை மீது பதிந்திருந்த தமிழக ஊடகங்களின் கவனம் தற்போது திசை திரும்பி, சென்னை ஆழ்வார்ப் பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையை நோக்கித் திரும்பியுள்ளது.
மருத்துவ உலகுக்கும், வழக்கமான நோயாளிகளுக்கும் மட்டுமே தெரிந்திருந்த காவேரி மருத்துவமனையின் பெயர் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி முதல் உலகம் எங்கும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. காரணம், திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி உடல் நலக் குறைவால் அங்கு அனுமதிக்கப்பட்டதுதான்!
நேற்று வியாழக்கிழமை இரவு 11.00 மணியளவில் காவேரி மருத்துவமனையில் கருணாநிதி மீண்டும் அனுமதிக்கப்பட்டதிலிருந்து, இன்று முதல் அனைத்து ஊடகங்களின் கவனமும் மீண்டும் அந்த மருத்துவமனை நோக்கித் திரும்பியுள்ளது.
இன்று காலை முதல் கலைஞரின் குடும்பத்தினரும், திமுக தலைவர்களும் மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் காவேரிக்குப் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், ஆகியோர் இன்று காவேரி மருத்துவமனை வந்து கலைஞரின் உடல் நலம் குறித்து விசாரித்து அறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து அனைத்து முன்னணி ஊடகங்களும் காவேரி மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளன.
கலைஞருக்கு நுரையீரல் தொற்று பாதித்திருப்பதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக காவேரி மருத்துவமனையின் அறிக்கை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கருணாநிதியின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், அவர் சாய்வு நாற்காலியில் இன்று அமர்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.