மணிலா – சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிக் கொள்பவரான பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூடெர்ட்டேவின் உடல்நிலை குறித்து தற்போது புதிய சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது.
அதாவது தேர்தல் சமயத்தில் டூடெர்ட்டேவுக்குப் புற்றுநோய் இருந்ததாக பலர் சந்தேகிக்கின்றனர். இதனால் தற்போது அவரது உடல்நிலை எப்படி உள்ளது? என்பதை மருத்துவப் பரிசோதனைகளின் வழியாக உறுதிப்படுத்த வேண்டும் என்று பிலிப்பைன்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தான் ஃபெந்தானில் என்ற சக்திவாய்ந்த வலிநிவாரணி மருந்தை உட்கொள்வதை டூடெர்ட்டே வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்றில் தனது முதுகெலும்பில் ஏற்பட்ட காயத்திற்காக அம்மருந்தைப் பயன்படுத்துவதாக டூடெர்ட்டே தெரிவித்துள்ளார்.
அம்மருந்து புற்றுநோய் போன்ற தீவிரமான நோயாளிகளுக்காக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவதாகும்.
ஆனால், அம்மருந்தை டூடெர்ட்டே அளவுக்கு அதிகமாக உட்கொள்வதை அறிந்த அவரது மருத்துவர் அதனை உடனடியாக நிறுத்தும் படி கூறியுள்ளார்.
அமெரிக்கா, ஐக்கிய நாடுகளுக்கு எதிராக மோசமான கருத்துக்களைக் கூறி சர்ச்சையில் சிக்கிய டூடெர்ட்டே, ஆயிரக்கணக்கான போதைப் பித்தர்களைக் கொன்றதை ஒப்புக் கொண்டு தற்போது அரச விசாரணையை எதிர்நோக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.