தாங்கெராங் – ஜகார்த்தாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது, தற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக நம்பப்படும் 3 சந்தேக நபர்களை இந்தோனிசியக் காவல்துறை இன்று புதன்கிழமை சுட்டுக் கொன்றது.
வீடு ஒன்றில் வெடிகுண்டுகளுடன் பதுங்கி இருப்பதாக அவர்களைப் பற்றி தகவல் கிடைத்தவுடன் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அங்கு சென்ற காவல்துறை அதிகாரிகள் அவர்களை சரணடையும் படி எச்சரித்தனர்.
ஆனால் காவல்துறையை நோக்கி கையெறி குண்டுகளை அவர்கள் வீசியதால், வேறுவழியின்றி அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அதிகாரிகள், துப்பாக்கிச்சூடு நடத்தி அவர்களை சுட்டுக் கொன்றனர்.
கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டத்திலோ அல்லது புத்தாண்டுக் கொண்டாட்டத்திலோ உள்ளே நுழைந்து காவல்துறை அதிகாரியைக் கத்தியால் குத்தி, அங்கு சலசலப்பை ஏற்படுத்தி, கூட்டம் சேர்ந்தவுடன் தற்கொலைத் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம், இந்தோனிசிய அதிபர் ஜோகா விடோடோவின் அலுவலகத்தில் 3 கிலோ எடையுள்ள குக்கர் வெடிகுண்டுடன், பெண் ஒருவரும் அவரது இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் பிடிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.