ஷா ஆலம் – அம்பாங்கில் நீர் விநியோகம் தடைபட்டுள்ளதால் சிலாங்கூர் மாநில செயலகக் கட்டிடத்திற்கு முன்பு இடுப்பில் துண்டு மட்டும் கட்டிய நிலையில் சென்ற சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர் டத்தோ ஜமால் மொகமட் யூனோஸ், மந்திரி பெசார் அலுவலகத்தில் தான் குளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இன்று புதன்கிழமை காலை 9.40 மணியளவில் செயலகத்தின் முதன்மை நுழைவு வாயிலுக்கு வந்த ஜமால், கையில் குளிப்பதற்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து வந்திருந்தார்.
அவரை அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜமால், “நான் இங்கே குளிக்க மட்டும் தான் விரும்புகிறேன். வெடிகுண்டு வைக்க அல்ல. ஏன் அவர்கள் என்னை அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை” என்று கோபத்துடன் கூறிய ஜமால், நீர் தடை விவகாரத்தை சிலாங்கூர் அரசு கவனிக்கத் தவறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.