சென்னை – தந்தி தொலைக்காட்சியில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயகுமார், வழங்கிய நேர்காணலில் கூறியிருந்த சில கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் அவரது சகோதரர் தீபக் ஜெயகுமார்.
தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் தீபக் தெரிவித்திருந்த சில விவரங்கள்:
- அரசியலில் ஈடுபடுவேன் என்ற தீபாவின் முடிவு தவறான அணுகுமுறையாகும். எனது அத்தை ஜெயலலிதாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.
- எனது தந்தையார் இறந்த போது நாங்கள் சிறுவயதினராக இருந்ததால் எங்களின் அனைத்துத் தேவைகளையும் ஜெயலலிதாதான் செய்து கொடுத்தார். எங்களுக்கு எல்லாவற்றையும் அத்தையும், சின்ன அத்தை சசிகலாவும் சேர்ந்துதான் செய்தார்கள். ஜெயலலிதா எங்களுக்கு செய்தது எதையும் சசிகலா தடுத்ததில்லை.
- தீபாவை மருத்துவமனையில் ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கவில்லை என்ற கூற்று தவறானது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த 75 நாட்களில் ஏறத்தாழ 70 நாட்கள் நானும் மருத்துவமனையில் இருந்தேன். என்னை யாரும் தடுக்கவில்லை. அதோடு ஜெயலலிதாவுக்கான சில மருத்துவ ஆவணங்களில் சின்ன அத்தை சசிகலா கையெழுத்திட்டார். சில ஆவணங்களில் நான் கையெழுத்திட்டேன்.
- சசிகலா குடும்பக் கட்டுப்பாட்டில் இருக்கிறேன் என்பது உண்மையல்ல. யாருடைய கட்டுப்பாட்டிலும் நான் இல்லை. இருக்கவும் மாட்டேன். இப்போதுகூட நீங்கள் தந்தி தொலைக்காட்சியில் இருந்து அழைத்தீர்கள். நானும் பேசிக் கொண்டிருக்கின்றேன். நான் யாருடைய நெருக்குதலாலும், உத்தரவாலும் உங்களுடன் இப்போது பேசிக் கொண்டிருக்கவில்லை.
- அடுத்த பொதுச் செயலாளராக சசிகலாவைத் தேர்ந்தெடுப்பது என்பது அந்தக் கட்சியின் பொதுக்குழு மற்றும் உறுப்பினர்களின் முடிவு.
- ஜெயலலிதாவுக்கு ஈடாக இன்னொரு தலைவரைப் பார்க்க முடியாது. இருந்தாலும், இத்தனை ஆண்டுகளாக அவருடன் ஒன்றாக இருந்தவர், அவரது நடவடிக்கைகளில் சேர்ந்து பங்கு கொண்டவர் என்ற முறையில், கட்சியில் உள்ள மற்றவர்களோடு தொடர்பில் இருந்தவர் என்ற முறையில் சசிகலா அதிமுகவை வழிநடத்துவதில் சிறப்பாக செயல்படுவார் என நம்புகின்றேன்.