சென்னை -வருமானவரித் துறை அதிரடி சோதனை நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் பணத்தையும், பொருட்களையும் சேகர் ரெட்டி என்பவரின் இல்லங்களிலிருந்து கைப்பற்றப்பட்டிருக்கும் நிலையில், இன்று புதன்கிழமை மாலை அவரும் அவருடன் தொடர்பு கொண்டவருமான சீனிவாசலு என்பவரும் கைது செய்யப்பட்டு சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வு இலாகாவின் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
அவர்களுக்கு ஜனவரி 3-ஆம் தேதி வரை தடுப்புக் காவல் வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தலைமைச் செயலாளர் மகன் வீட்டில் பணம், நகைகள் பறிமுதல்
இதற்கிடையில், இன்று புதன்கிழமை அதிகாலை முதல் சேகர் ரெட்டியோடு தொடர்புடையவர் என்ற முறையில் தமிழகத்தின் தலைமைச் செயலாளரான ராம மோகன ராவ் இல்லத்திலும், அவரது உறவினர்கள் இல்லங்களிலும் வருமானத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ராம்மோகனராவ் மகன் மற்றும் உறவினர்கள் வீட்டில் இருந்து இன்று மாலை 18 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பணம், தங்கம், நகைகள், பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பணம் புதிதாக அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக இருந்தன என்றும் மேலும் 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதுவரை இல்லாத நடைமுறையாக தமிழக அரசின் தலைமைச் செயலகத்திலுள்ள தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் அலுவலகத்திலேயே இன்று மாலை கடந்த மூன்று மணி நேரங்களாக சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.