கோலாலம்பூர் – விஷால், தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ‘கத்திச்சண்டை’ என்ற திரைப்படம் வரும் டிசம்பர் 23-ம் தேதி, வெள்ளிக்கிழமை, உலகமெங்கும் வெளியாகிறது.
இத்திரைப்படத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிக எதிர்பார்ப்பிற்குக் காரணம் நடிகர் வடிவேலுவின் மறுபிரவேசம் தான்.
இதுவரை தான் நடித்த படங்களில் இல்லாத அளவிற்கு கூடுதலான நகைச்சுவையை இதில் வழங்கியிருப்பதாக வடிவேலு தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் எம்எஸ்கே பிலிம் புரொடக்சன்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறது.
இந்நிலையில், இத்திரைப்படம் குறித்து வடிவேலு அளித்துள்ள பிரத்தியேகப் பேட்டியில் கூறியிருப்பதாவது:-
“மெட்ராஸ் எண்டர்பிரைஸ் அப்படிங்கிற பேனர்ல, தயாரிப்பாளர் அன்பு அண்ணன் நந்தகோபால் சார், கத்திச் சண்டைங்கிற படத்தைத் தயாரிச்சிருக்காரு. இந்தப் படத்தில் என்னுடைய சகோதரன், நிஜ ஹீரோ விஷால் அவர்கள் ஹீரோவா நடிச்சிருக்காரு. எப்பவும் போல என் படத்துல இருக்குற நகைச்சுவையை விட இதில் அதிகமா நகைச்சுவை பண்ணியிருக்கேன்னு நெனக்கிறேன். அதனால் படத்தை தியேட்டர்ல போய் பாருங்க.. சந்தோசப்படுங்க.உங்க மனசுல உள்ள இறுக்கத்தையும், வேதனையையும் குறைக்கிற அளவுக்கு நான் ரொம்ப நாளைக்குப் பிறகு இந்தப் படத்தில் வரேன். இதே மாதிரி இனி நிறைய படங்களில் வருவேன். மலேசியாவுல இருக்குற மக்கள் இந்தப் படத்தைப் பார்த்து உங்க மனசுல இருக்குற பாரத்தைப் பூரா இறக்கி, நல்லா சிரிங்க, ரசிங்க, ருசிங்க, சந்தோசப்படுங்க” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “சிடில பார்க்காதீங்க.. திருடங்க சகவாசம் வேண்டாம். திருட்டு வீசிடிய வாங்காதீங்க. தியேட்டர்ல போய் பாருங்க” என்று தெரிவித்துள்ளார்.