கோலாலம்பூர் – டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மீது இரண்டாவது முறையாக சுமத்தப்பட்ட ஓரினப் புணர்ச்சி வழக்கின் பின்னணியில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரோ, டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கோ சம்பந்தப்படவில்லை என முன்னாள் காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ மூசா ஹசான் தெரிவித்துள்ளார்.
மகாதீர் அந்த வழக்கில் காவல் துறையினரால் எதற்காகவும் அழைக்கப்படவில்லை என்றும் மூசா விளக்கம் அளித்தார்.
நேற்று பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் மூசா இந்த விவரங்களை வெளியிட்டார்.
பிரபல இணையத் தள எழுத்தாளரான ராஜா பெத்ரா கமாருடின் தனது வலைப் பதிவில் முன்னாள் அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ கனி பட்டேலும், மூசா ஹாசானும் இணைந்து அன்வார் மீதான இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கை ஜோடித்தனர் என எழுதியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாகவே, மூசா நேற்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார்.
தனக்கு களங்கம் ஏற்படுத்திய வகையில் ராஜா பெத்ரா கமாருடின் எழுதியுள்ள வாசகங்களை அடுத்த 14 நாட்களுக்குள் மீட்டுக் கொள்ள வேண்டும் எனவும், இல்லையென்றால் அவர் மீது காவல் துறையில் புகார் செய்வதோடு, அவதூறு வழக்கும் தொடரப் போவதாக மூசா எச்சரித்துள்ளார்.