Home இந்தியா ஒரு வருடத்திற்கு முந்திய அதே வாக்குறுதிகள் – பிரதமரின் கிள்ளான் அறிவிப்புக்கு சேவியர் பதில்

ஒரு வருடத்திற்கு முந்திய அதே வாக்குறுதிகள் – பிரதமரின் கிள்ளான் அறிவிப்புக்கு சேவியர் பதில்

656
0
SHARE
Ad

Xavier-Jeyakumar-Sliderமார்ச் 21 – “கடந்த ஞாயிற்றுக்கிழமை காப்பாருக்கு  வருகை புரிந்த பிரதமர் வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசியிருந்தார். கடந்த ஆண்டு பொங்கலுக்குக்  காப்பாருக்கு வருகை புரிந்த போது கொடுத்த அதே வாக்குறுதிகளையே இம்முறையும் மீண்டும் புதுப்பித்துள்ளார். அதற்கு மேல் எதுவுமில்லை. கடந்த ஆண்டு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டாரா? இல்லையே ! ஏன்  முடியவில்லை? நிறைவேற்றுவதற்கு  எந்த ஏற்பாட்டையும் அவர் இதுவரை செய்யவில்லை” என  கிள்ளான் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் பத்திரிக்கை அறிக்கையின் வழி தெரிவித்துள்ளார்.

தனது அறிக்கையில் சேவியர் மேலும் தெரிவித்திருப்பதாவது:-

“கடந்த ஞாயிற்றுக்கிழமை  காப்பார் தேசிய இடைநிலைப் பள்ளிக்கு ம.இ.கா வின் விருந்தினராக வந்திருந்த பிரதமர்  இந்தியர்களுக்குப் பல  வாக்குறுதிகளை வழங்கிச் சென்றார்.  ஆனால், அந்த வாக்குறுதிகளைக் கொஞ்சம் நோட்டமிட்டால்,  அதில் போலித் தன்மைகள் இருந்தது நன்கு புலப்படும்.”

#TamilSchoolmychoice

“நம் சமுதாயம் விழிப்படைய வேண்டும், கவர்ச்சிகளுக்குச் சீக்கிரம் மயங்கி விடுபவர்களாக நாம் இருக்கக்கூடாது. இது நாள் வரை நாம் ஏமாளியாக இருந்து எப்படியோ யார் யாரிடமோ ஏமாந்து இருந்து விட்டோம். இனியும் அதே பாணியில் இருந்தால் அதன் பின் விளைவுகள்  மிகக் கடுமையாக  நமது சந்ததியைப் பாதிக்கும்.”.

“கடந்த ஞாயிற்றுக்கிழமை காப்பாருக்கு  வருகை புரிந்த பிரதமர் வெற்று வாக்குறுதிகளையே அள்ளி வீசியிருந்தார். கடந்த ஆண்டு பொங்கலுக்குக்  காப்பாருக்கு வருகை புரிந்த போது கொடுத்த வாக்குறுதிகளையே இம்முறையும் மீண்டும் புதுப்பித்துள்ளார். அதற்கு மேல் எதுவுமில்லை. கடந்த ஆண்டு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டாரா?? என்றால் அதுவும் இல்லையே ! ஏன்  முடியவில்லை? நிறைவேற்றுவதற்கு  எந்த ஏற்பாட்டையும் அவர் செய்யவில்லை”

“அவர் வாக்குறுதி அளித்த அவ்வருடத்திலேயே பொதுத்தேர்தலையும் நடத்த உத்தேசித்திருந்தார், அதனால் எவரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்று நம்பினார். அப்படியே எவரும் கேள்வி கேட்டால் பிரதமர் கூறியவை கிடைக்கும் ‘’இஞ்சி சப்பாத்தி‘’ என்று சொல்லி கட்சிக்காரர்களை  சமாளித்து விடலாம் என்று எண்ணியிருந்தார். ஆனால்  அவரின் கெட்ட நேரம் தேர்தல் தள்ளி போய்க் கொண்டே இருக்கிறது”

இதற்கெல்லாம் பிரதமர் வந்து அறிவிக்க வேண்டுமா?

தான் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் “ஒரு பள்ளியில் கழிவறைக்கும், மின்சுடலை கட்டுவதற்கும் பிரதமரே வந்து வாக்களிக்க வேண்டுமா?  கடந்த ஆண்டு காப்பாரில் மின்சுடலைக்கும், தமிழ்ப்பள்ளிகளின் கட்டடத்துக்கும்  அளித்த வாக்குறுதிகள் என்னவானது?  ஆனால் அதற்குப்  பின், ஏற்பாட்டில் இறங்கி, சுபாங் ஜெயா நகராட்சி மன்ற ஒத்துழைப்புடன்  பூச்சோங்கில் ஒரு மின்சுடலையை பக்காத்தான்  கட்டி முடித்து விட்டதே!” என்றும் சேவியர் குறிப்பிட்டுள்ளார்.

“உலுசிலாங்கூர் செரண்டாவில்  தமிழ்ப்பள்ளி கட்ட 2010 ம்  ஆண்டு உலுசிலாங்கூர்  இடை தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை எப்பொழுது நிறைவேற்றுவீர்கள்?

பூச்சோங் கின்ராரா தமிழ்ப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மலேசியாவில் புதிய  ஆறு தமிழ்ப்பள்ளிகள் என அளித்துச் சென்ற வாக்குறுதிகள் என்ன ஆனது? அண்டாலாஸ் தொகுதியில் கட்டுமானத்திற்கான நிலத்துடன் காத்திருக்கிறேன்.” என்றும் சேவியர் கூறியுள்ளார்.

மீண்டும் மீண்டும் எஸ்பிஎம் தமிழ் தேர்வு பிரச்சனை…

“இம்முறை காப்பாரில்  பிரதமர் வழங்கிய முக்கிய வாக்குறுதியில்  எஸ்,பி.எம் தேர்வில்  இந்திய மாணவர்கள் 12 பாடங்களை  எடுக்கலாம், அதற்கு அரசு ஒப்புதல் என்கிறார், அது குறித்துக் கல்வியமைச்சரைக் கண்டு பேசி முடிவெடுத்துள்ளதாகக் கூறினார். இதே பிரச்சனை 2009ம் ஆண்டில் தலையெடுத்ததே! அப்பொழுது புதிதாகப் பிரதமர் பதவி ஏற்றிருந்த டத்தோஸ்ரீ நஜிப் இதே போன்ற அறிவிப்பினையே செய்தார். ஆனால், கல்வி அமைச்சரை இப்பொழுதுதான்  கண்டு பேசியதாகப் பிரதமர் கூறியுள்ளார்.  ஆக, தமிழ்க்கல்வியும், தமிழ்மொழி தேர்வுகளும் கூடத் தேர்தல் ஸ்டண்ட்  ஆகிவிட்டதா?” என்றும் சேவியர் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

“புக்கிட் ராஜாவில் எல்லாத் தொழிலாளர்களுக்கும்  வீடாம், வரவேற்கிறோம், ஏன் அதனைப் பொதுத்தேர்தல் முடியும் வரை தள்ளிப்போட வேண்டும். அந்தத் தோட்டம் மத்திய அரசாங்கத்தின் துணை நிறுவனமான சைம்டார்பிக்கு சொந்தமானது தானே,  பிரதமர் கட்டளையிட்டால் அவர்கள் மறுக்கவா போகிறார்கள். உடனடியாகத் திட்டத்தை ஆரம்பித்து  அவர்களுக்கு வீடு வழங்குங்கள், அதனை அனைவரும் வரவேற்பார்கள்.”

“அதனுடன் முழுக்க முழுக்க உங்கள் பொறுப்பிலுள்ள கூட்டரசு பிரதேசத்திலுள்ள புக்கிட் ஜாலில் தோட்டத்தையும் கவனியுங்கள். அந்தத் தோட்ட நிலமும் அரசாங்கத்துக்குச் சொந்தமானதுதான், அங்குள்ள தொழிலாளர்களுக்கு நான்கு ஏக்கர் நிலந்தானே  தேவைப்படுகிறது. அவர்களும்  எவ்வளவு காலத்துக்குப் போராடுவார்கள், அவர்களும்  இந்தியர்கள்தான்  அவர்கள் மீதும்  கொஞ்சம்  கரிசனம் காட்டுவாரா பிரதமர்?” என சேவியர் ஜெயகுமார் பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

“தேர்தல் வரும் போது போட்டி போட்டுக் கொள்ளலாம், அதற்கு நாங்கள்  தயார். ஆனால் மக்களின் அடிப்படை தேவைகளில், கல்வியில், தமிழ்ப்பள்ளி விவகாரங்களில்  தமிழர்களை ஏமாற்றாதீர்கள். பத்துமலையில் கொண்டோமினிய கட்டுமானத்தை நிறுத்தவும் பக்காத்தான் ஆட்சியை மாற்ற வேண்டும், தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு கட்டவும் ஆட்சி மாற வேண்டும், மின்சுடலை கட்டவும் ஆட்சி மாற வேண்டும், தமிழ்ப்பள்ளிகளில் கழிவறை கட்டக்கூட ஆட்சியை ஒப்படையுங்கள் என்பது மிக வேடிக்கையான அரசியலாகும். மக்கள் உங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரமும், வரிப்பணமும் அரசியல் விளையாட அல்ல, மக்களுக்குச் சேவையாற்ற”  என்றும் தனது அறிக்கையில் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.