Home Featured நாடு தமிழ்ப் பள்ளிகளில் இருமொழித் திட்டம்: இத்தனை எதிர்ப்புகள் ஏன்?

தமிழ்ப் பள்ளிகளில் இருமொழித் திட்டம்: இத்தனை எதிர்ப்புகள் ஏன்?

1310
0
SHARE
Ad

STAR

கோலாலம்பூர் : கடந்த சனிக்கிழமை மலேசியாவின் 13 அரசு சார்பற்ற தமிழ் இயக்கங்கள் கோலாலம்பூரில் ஒன்றிணைந்து நடத்திய சந்திப்புக் கூட்டத்தில் தமிழ்ப் பள்ளிகளில் இருமொழித் திட்டம் கொண்டு வரப்படுவதற்கு எதிர்ப்புகள் தெரிவித்துள்ளதோடு, எதிர்வரும் சனிக்கிழமை டிசம்பர் 31-ஆம் தேதி இதன் தொடர்பில் ஆட்சேபப் பேரணி ஒன்று நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த இருமொழித் திட்டம் என்றால் என்ன – ஏன் இதற்கு இத்தனை எதிர்ப்புகள்? என்ற கேள்விகளோடு தமிழ் ஆர்வலர்களின் கவனம் தமிழ்ப் பள்ளிகளின் பக்கம் தற்போது திரும்பியுள்ளது.

#TamilSchoolmychoice

டிசம்பர் 31-ஆம் தேதி கிள்ளானில் உள்ள லிட்டல் இந்தியா வளாகத்தில் இருமொழித் திட்டத்திற்கு எதிரான ஆட்சேபப் பேரணி நடத்தப்படவுள்ளது.

இருமொழித் திட்டம் என்பது என்ன?

தற்போது தமிழ்ப் பள்ளிகளில் கணிதம், விஞ்ஞானம் ஆகிய இரு பாடங்கள் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுகின்றன.

புதிதாக அடுத்த ஆண்டு முதல் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 49 தமிழ்ப் பள்ளிகளில் ஒரு புதிய நடைமுறையிலான கற்பிக்கும் திட்டம் அறிமுகம் காண்கின்றது. இந்தத் தமிழ்ப்பள்ளிகளோடு சேர்த்து நாடு முழுமையிலும் உள்ள சீனப் பள்ளிகள் உள்ளிட்ட 841 பள்ளிகளில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இருமொழித் திட்டம் என அழைக்கப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், கற்பிக்கப்படும் 8 பாடங்களில் கணிதம், விஞ்ஞானம் ஆகிய இரு பாடங்கள் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படும் வேளையில், கூடுதலாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு தொழில்நுட்பம் ஆகிய இரண்டு பாடங்கள் மலாய் அல்லது ஆங்கிலத்தில் கற்பிக்கப்படும்.

மேலும் கூடுதலாக மலாய் மொழியில் இரண்டு பாடங்களும், தமிழ் மொழியில் இரண்டு பாடங்களும் கற்பிக்கப்படும்.

இதன்படி பார்த்தால், தமிழ்ப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் இரண்டே பாடங்களில்தான் தமிழ் மொழியைத்தான் கற்பார்கள். மற்ற ஆறு பாடங்களை மற்ற மொழிகளில் கற்பார்கள்.

இதன் காரணமாக, தமிழ்ப் பள்ளிகள் எனப் பெயருக்கு இருந்தாலும், அங்கு தமிழின் பயன்பாடு பெருமளவில் குறைந்து விடும் – மாணவர்கள் தமிழில் புலமை பெறுவதும் குறைந்து விடும் என்பது இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறும் காரணங்களில் சில.

மற்ற மொழிகளில் இந்தப் பாடங்களைக் கற்பிக்கும் திறன்பெற்ற ஆசிரியர்கள் தமிழ்ப் பள்ளிகளில் நியமிக்கப்படுவார்களா என்பது போன்ற சந்தேகங்களும் எழுப்பப்படுகின்றன.

மாணவர்களின் புறப்பாட நடவடிக்கைகள் தமிழிலேயே இருப்பதால், மற்ற பாடங்கள் தமிழிலேயே கற்பிக்கப்படுவதால், தமிழ்ப் பள்ளிகளில் மொழியின் பயன்பாடு குறைந்துவிடாது என்பது இந்தத் திட்டத்தை ஆதரிப்பவர்களின் வாதம்.

ஆனால், நாளடைவில் பொதுத் தேர்வுகளில் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் இந்த இருமொழித் திட்டத்தால் பாதிக்கப்படும் எனப் பரவலாகக் கருதப்படுகின்றது.

தாய்மொழிக் கல்விதான் தமிழ்ப் பள்ளிகளின் நோக்கம்

“தமிழ்ப் பள்ளிகளில் ஆரம்பக் கல்வி, தாய்மொழியான தமிழிலேயே கற்பிக்கப்பட வேண்டும். தாய்மொழிக் கல்விதான் அந்தத் தமிழ்ப் பள்ளிகள் உருவாக்கப்பட்டதற்கும், நிலைநிறுத்தப்பட்டதற்குமான அடிப்படைக் காரணங்கள். எனவேதான் இருமொழித் திட்டத்தை எதிர்க்கிறோம்” என கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தமிழ் இயக்கங்களின் சார்பில் எதிர்ப்புக் குரல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பொதுவாக மாணவர்கள் தங்களின் தாய்மொழியில் ஆரம்பக் கல்வியைப் பெறும்போதுதான் அவர்கள் திறன் பெற்றவர்களாக உருவாகின்றார்கள் என்பது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள கருத்தாகும்.

தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் புதிய இருமொழித் திட்டத்தால் மேலும் குழப்பமடைவார்கள் என்றும் கருதப்படுகின்றது. ஏற்கனவே, புறநகர் பகுதிகளில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கணிதம், விஞ்ஞானம் பாடங்களை ஆங்கிலத்தில் கற்று வருவதால் இந்தப் பாடங்களில் அவர்களின் தேர்ச்சி விகிதமும், திறனும் குறைந்து விட்டது என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றது.

இருமொழித் திட்டம் கடும் எதிர் விளைவுகளைச் சந்தித்து வருவதால், தொடர்ந்து அறிமுகப்படுத்தப்படுமா அல்லது மீட்டுக் கொள்ளப்படுமா என்ற கேள்விகள் தற்போதைக்கு எழுந்துள்ளன.

-இரா.முத்தரசன்