Home Featured நாடு 14-வது பொதுத் தேர்தல்: 2017-இல் எந்தத் தேதிகளில் நடைபெறலாம்?

14-வது பொதுத் தேர்தல்: 2017-இல் எந்தத் தேதிகளில் நடைபெறலாம்?

1311
0
SHARE
Ad

general-election-14

கோலாலம்பூர் – மலரவிருக்கின்ற 2017 புத்தாண்டு, மலேசியாவின் 14-வது பொதுத் தேர்தல் நடைபெறும் ஆண்டாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும், பரபரப்பும் அனைத்து தரப்பு மலேசியர்களிடத்திலும் ஊடுருவிப் பரவியுள்ளது.

2018-ஆம் ஆண்டு மே மாதம் வரையில் நஜிப் துன் ரசாக் தலைமையிலான நடப்பு அரசாங்கத்தின் ஆட்சிக் காலம் பதவியில் நீடிக்க முடியும். இருந்தாலும், அதற்கு முன்பாகவே பொதுத் தேர்தல் 2017-இல் நடத்தப்படும் என்று ஆரூடங்கள் கூறப்படுவதற்கான முக்கியக் காரணம், 2018 வரை பொதுத் தேர்தல் நீட்டிக்கப்பட்டால், எதிர்க்கட்சிக் கூட்டணி அதற்குள் கூடுதல் வலுவடைந்து விடும் என்ற தேசிய முன்னணி தலைவர்களின் அச்சம்தான்!

#TamilSchoolmychoice

2018 மே மாதம் வரை பொதுத் தேர்தலை நீட்டிப்பதன் மூலம் தேசிய முன்னணியை மேலும் பலப்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை விட, அதற்குள்ளாக, எதிர்க்கட்சிக் கூட்டணி இன்னும் அதிகமான அரசியல் பலம் பெற்று விடும் என்ற அச்சம்தான் தேசிய முன்னணி ஆதரவாளர்களிடத்திலும், உறுப்பியக்  கட்சிகளிடத்திலும் மேலோங்கி நிற்கின்றது.

1mdb3தொடர்ந்து மக்களின் மனங்களில் இருந்து அகலாமல் விஸ்வரூபம் எடுத்து வரும்  1எம்டிபி பிரச்சனை, ஜிஎஸ்டி என்ற பொருள்சேவை வரியின் தாக்கம், சரிந்து வரும் ரிங்கிட்டின் மதிப்பு, பொருளாதார மந்தம் ஆகிய காரணங்களால் தேசிய முன்னணியின் செல்வாக்கு மேலும் பலவீனமடையும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கணிப்பாக இருக்கின்றது.

இத்துடன் சேர்ந்து துன் மகாதீரின் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணியும் வலுவடைந்து விட்டால், 14-வது தேர்தல் முடிவுகள் தேசிய முன்னணிக்கு பெரும் ஆபத்தாக முடிந்து விடும்.

எந்தத் தேதிகளில் பொதுத் தேர்தல்?

Muhyiddin-Mahathir-Kg Baru meeting

பொதுத் தேர்தல் என்று வரும்போது தேசிய முன்னணி எப்போதும் கருத்தில் கொள்வது ஹரி ராயா நோன்புப் பெருநாளைத்தான்! 2017-இல் ஜூன் 25-ஆம் தேதி வாக்கில் ஹரி ராயா கொண்டாடப்படுகின்றது என்பதால் மே 25-ஆம் தேதியே நோன்பு மாதம் தொடங்கி விடும்.

எனவே, மே மாத இறுதி-ஜூன்-ஜூலை மாதங்களில் பொதுத் தேர்தல் நடக்க வாய்ப்பில்லை. ஹரி ராயா பெருநாள் முடிந்தவுடன் அடுத்த ஒரு மாத காலத்திற்கு, அரசாங்க இலாகாக்களும், மலாய் அமைப்புகளும், அம்னோ தொகுதிகளும், விருந்துபசரிப்புகளை நடத்தி, வாக்காளர்களோடு நெருக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள் என்பதால், ஜூலை மாதத்தை அந்த அற்புத வாய்ப்புக்காகப் பயன்படுத்திக் கொள்ளவே தேசிய முன்னணி விரும்பும்.

எனவே, நோன்பு மாதத்திலோ அதற்குப் பின்னர் ஒரு மாதத்திற்குள்ளாகவோ, பொதுத் தேர்தல் நடத்தப்படும் வாய்ப்புகள் குறைவு.

‘சீ’ விளையாட்டுப் போட்டிகள் – பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமா?

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 31 வரை ‘சீ’ விளையாட்டுப் போட்டிகள் எனப்படும்  (SEA Games) தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் மலேசியாவில் நடைபெறவிருக்கின்றன.

sea-southeast-asian-games-2017

இந்தப் போட்டிகளை பிரம்மாண்டமான முறையில் நடத்தி, மக்களுக்கு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதோடு, அதைத் தொடர்ந்து வரும் மலேசிய சுதந்திர தினம் (ஆகஸ்ட் 31) அடுத்து வரும் மலேசிய தினம் (செப்டம்பர் 16) ஆகிய கொண்டாட்டங்களையும், கோலாகலமான முறையில் கொண்டாடி, அதன் மூலம் ஒரு “உற்சாகமான சூழலை” (Feel Good) உருவாக்கி உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துவது என்ற திட்டத்தையும் தேசிய முன்னணி கொண்டிருப்பதாகக் கருதப்படுகின்றது.

Logo-BNஇந்தக் கோணத்தில் பார்த்தால் செப்டம்பர் மாதத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம். மலேசிய தினத்தோடு இணைந்து நடத்தப்படுவதால் சபா, சரவாக் மக்களையும் ஒன்றிணைக்கும்  களமாக பொதுத் தேர்தல் அமையும் – தேசிய முன்னணிக்கான வெற்றி வாய்ப்பும் பெருகும் – என்பது மற்றொரு கணிப்பு.

செப்டம்பர் 1-ஆம் தேதி ஹரி ராயா ஹாஜி எனப்படும் ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாடப்படுவதால், அந்தத் தேதிக்குப் பின்னர், அடுத்த சில நாட்களில் ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களும் நாடு திரும்பிவிடுவார்கள்.

எனவே, செப்டம்பர் மாதம் பொதுத் தேர்தலுக்கு மிகவும் பொருத்தமான மாதமாகவே படுகின்றது.

அக்டோபருக்குப் பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படுமா?

GE-SPR-Ballot-boxசெப்டம்பர் மாதத்தை அடுத்துப் பார்த்தால் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நாடு முழுவதும் பள்ளித் தேர்வுகள் நடைபெறும் காலம் என்பதால் அந்த காலகட்டத்தில், பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு.

மேலும் அக்டோபர் மாத வாக்கில் நாட்டின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும். இப்போதிருக்கும் சூழலில் மக்களுக்கு சலுகைகளை வாரி வழங்குவதற்கான பொருளாதார சூழல் நிலவவில்லை என்பதால், வரவு செலவுத் திட்டத்தால் ஏற்படக் கூடிய பின்விளைவுகளை, சர்ச்சைகளைத் தடுப்பதற்காக, வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பாகவே பொதுத் தேர்தலை நடத்துவதும் ஒரு வியூகமாக அமையக் கூடும்.

தொடர்ந்து டிசம்பர் மாதம் கிளந்தான், திரெங்கானு, ஜோகூர் போன்ற மாநிலங்களில் தொடர் மழை, வெள்ளம் போன்ற அபாயங்கள் ஏற்படக் கூடிய காலகட்டம் என்பதால் அந்த மாதத்திலும் பொதுத் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை.

மே மாதத்திற்கு முன்பாகவும் பொதுத் தேர்தல் நடைபெறலாம்

pakatan-harapan_

நீண்ட காலம் காத்திருக்காமல், தங்களைப் பிரச்சாரங்களின் மூலம் பலப்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு தராமல், மே மாதத்திற்கு முன்பாகவே, நஜிப் பொதுத் தேர்தலை நடத்தி விடலாம் என்ற ஊகங்களும் தேசிய முன்னணி வட்டாரங்களில் உலவுகின்றன.

ஆனால், மே மாதத்திற்கு முன்பாக பொதுத்தேர்தலை நடத்துவதற்கு மிகக் குறுகிய காலமே இருப்பதால், தேசிய முன்னணியும் அதற்குள் தயாராவதற்கு கால அவகாசம் தேவைப்படும். பொதுவாக தேசிய முன்னணி பொதுத் தேர்தலைச் சந்திப்பதற்கு முன்னால் உறுப்பியக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவது, அந்தத் தொகுதிகளில் வெற்றி வாய்ப்புகளை ஆராய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும். அதற்கு நிறைய கால அவகாசமும் தேவைப்படும். அவசர கதியில் தேசிய முன்னணி எப்போதுமே பொதுத் தேர்தலை நடத்தியது இல்லை. அதிலும், மிகக் கடுமையான போட்டிகள் நிலவக்கூடிய சூழலில், சரியானத் திட்டமிடல் இல்லாமல், முன் தயாரிப்புகள் இல்லாமல் நஜிப்  தலைமையிலான தேசிய முன்னணி பொதுத் தேர்தலில்  களம் காண விரும்பாது.

தேர்தல் ஆணையத்தின் எல்லை – வாக்காளர் மறு சீரமைப்பு

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு முன்பாக தேர்தல் ஆணையம் முன்மொழிந்துள்ள தொகுதி எல்லைகள் – வாக்காளர் மறுசீரமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பின்னர்தான் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

காரணம், இந்த தொகுதி வாக்காளர் சீர்திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அது தேசிய முன்னணிக்கு பெருமளவில் சாதகமாக இருக்கும்.

electionஎனவே, தேர்தல் ஆணையத்தின் சீர்திருத்தங்களை எப்படியாவது ஏற்றுக் கொள்ளச் செய்துவிட்டு, அதன் பின்னர்தான் தேசிய முன்னணி பொதுத் தேர்தலைச் சந்திக்குமா அல்லது அத்தகைய சீர்திருத்தங்கள் தாமதமாகும் பட்சத்தில் அதற்கு முன்பாகவே பொதுத்தேர்தலைச் சந்திக்கும் துணிச்சல் தேசிய முன்னணிக்கு இருக்குமா என்ற கேள்வியும் எழுகின்றது.

இத்தகைய தேர்தல் ஆணையச் சீர்திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அதைத் தொடர்ந்து, வாக்காளர்கள் தங்களின் தொகுதி மாற்றங்களை அறிந்து கொள்வதற்கும், தாங்கள் வாக்களிக்கப் போகும் தொகுதிகளை மறுஉறுதிப் படுத்திக் கொள்வதற்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இதற்கும் கால அவகாசம் தேவைப்படும்.

எனவே, மே மாதத்திற்கு முன்பாக பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால், அதற்குள்ளாக, தேர்தல் ஆணையச் சீர்திருத்தங்கள் அமுலுக்குக் கொண்டுவரப்பட முடியுமா என்பது சந்தேகம்தான்! அதற்கு தேசிய முன்னணி தயாராக இருந்தால் மட்டுமே மே மாதத்திற்கு முன்பாக பொதுத்தேர்தலை நடத்துவதற்கு அது முடிவெடுக்கும்.

ஆக, 2017-இல் பொதுத் தேர்தல் நடக்கும் என்றால், அநேகமாக, செப்டம்பர் மாதத்தில்தான் நடைபெறும். அதற்கு முன்பாக நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

அவ்வாறு செப்டம்பர் 2017-இல் ஏதாவது காரணங்களுக்காக பொதுத் தேர்தல் நடத்தப்பட முடியாத சூழ்நிலை உருவாகுமானால், அதற்குப் பின்னர் தனது ஆட்சிக் காலத்தின் முழு தவணைக் காலத்தையும் மே 2018 வரை நிறைவு செய்துவிட்டுத்தான் தேசிய முன்னணி பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும்.

-இரா.முத்தரசன்