கோலாலம்பூர் – அஸ்ட்ரோ புகழ் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பால கணபதி வில்லியம் இயக்கத்தில், அவரே கதாநாயகனாகவும் நடிக்கும் ‘நீயும் நானும்’ என்ற புதிய திரைப்படத்தின் பூஜை, இன்று சனிக்கிழமை காலை தலைநகர், கோட்டு மலைப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றது.
பிஜிடபிள்யூ ஸ்டூடியோஸ் மற்றும் ஹெச்கே நெட்வொர்க்ஸ் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில், ஜாஸ்மின் மைக்கேல் கதாநாயகியாக நடிக்கிறார்.
அவருடன், கவிதா தியாகராஜன், கேகே.கண்ணா, சத்யா, ரேவதி டிஎச்ஆர், ‘கபாலி’ புகழ் அருண் குமரன் உள்ளிட்டோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சோமா காந்தன் ஒளிப்பதிவு செய்யவுள்ள இத்திரைப்படத்திற்கு, வர்மன் இளங்கோவன் இசையமைக்கிறார்.
படக்குழுவினரோடு, முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்ட இத்திரைப்பட பூஜை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும், 2017-ம் ஆண்டில் இத்திரைப்படம் மலேசிய ரசிகர்களை மகிழ்விக்க வருகின்றது என்றும் பால கணபதி தெரிவித்தார்.
கதாநாயகி ஜாஸ்மின் மைக்கேல் பேசுகையில், படத்தின் பாடல்களைக் கேட்கும் போதே இப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பினைப் பெறும் என்று தன்னால் உறுதியாகச் சொல்ல முடிகின்றது என்று கூறினார்.
இத்திரைப்படத்தின் வசனங்களை யுவாஜியும், பால கணபதியும் எழுதியுள்ளனர். உதவி இயக்குநராக விக்னேஸ் லோகராஜ் அசோகன் பணியாற்றியுள்ளார்.
மலேசியாவில் அனைத்துத் தரப்பு மக்களையும், குறிப்பாக இளைஞர்களைக் கவரும் படமாக ‘நீயும் நானும்’ அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.