Home கலை உலகம் ஆஸ்ட்ரோ “தமிழ்லட்சுமி”; ஜாஸ்மின், ஹேமாஜி, மூன் நிலா அனுபவங்கள்

ஆஸ்ட்ரோ “தமிழ்லட்சுமி”; ஜாஸ்மின், ஹேமாஜி, மூன் நிலா அனுபவங்கள்

1033
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த சில வாரங்களாக ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201) வாயிலாகவும் ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்டில் ஒளியேறி வருகிறது உள்ளூர் தமிழ் நாடகத் தொடரான “தமிழ்லட்சுமி”. ஏராளமான பார்வையாளர்களையும் இரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது. பாராட்டுகளையும் குவித்து வருகிறது. அந்த நாடகத் தொடரை இயக்கியிருக்கிறார் டாக்டர் விமலா பெருமாள்.

“தமிழ்லட்சுமி” தொடரில் மூன்று முக்கியப் பாத்திரங்களில் நடித்து, தங்களின் உடல்மொழியாலும், நடிப்புத்திறனாலும் இரசிகர்களைக் கவர்ந்திருக்கின்றனர், ஜாஸ்மின் மைக்கல், ஹேமாஜி, மூன் நிலா ஆகிய மூன்று நடிகையர்.

தங்களின் “தமிழ்லட்சுமி” தொடர் அனுபவங்களை செல்லியல் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

  • ‘தமிழ்லட்சுமி’ தொடரில் உங்களின் கதாபாத்திரங்களைப் பற்றி எங்களுடன் பகிர்ந்துக் கொள்ள முடியுமா?
#TamilSchoolmychoice

ஜாஸ்மின்:  ‘தமிழ்லட்சுமி’ தொடரில் எனது கதாபாத்திரத்தின் பெயர் ‘லெட்சு’.  லெட்சு ஒரு தைரியமான, புத்திசாலியான, பகுத்தறிவோடு முடிவெடுக்கும் பெண் வழக்கறிஞர். தனது அன்புக்குரிய தங்கை, யாஷுவின்பால் அக்கறைக் கொண்டவர். பிரேம் எனும் உடல் பயிற்சியாளரை திருமணம் செய்து கொண்டார். நேர்மறையான பண்புகள், அக்கறை, அளவில்லா அன்பு, புரிந்துணர்வு, மரியாதை போன்ற பல நல்ல குணாதிசயங்களோடு லெட்சு, பிரேம் ஒரு முன்மாதிரியான ஜோடியாக இத்தொடரில் வலம் வருகின்றனர்.

ஜாஸ்மின் மைக்கல்

ஹேமாஜி: இத்தொடரில் எனது கதாபாத்திரம் ‘தமிழ்’ என்று அழைக்கப்படும். மேலும் இக்கதாபாத்திரம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. தனது மாமியாரர் மற்றும் நாத்தனாருடன் கூட்டுக் குடும்பத்தில் வாழும் திருமணமான, ஒரு சுயாதீனமானப் பெண், தமிழ். அவர் எப்போதுமே தனது மாமியார் மற்றும் நாத்தனாரை நன்கு கவனித்துக் கொள்வார். மாமியார் மற்றும் நாத்தனார் இருவரிடமிருந்தும் மற்றும் பணியிடத்தில் முதலாளியிடமிருந்தும் அழுத்தத்தை எதிர்கொண்டாலும் வீட்டில் எப்போதும் அமைதியை உறுதிப்படுத்த முயற்சிப்பார். எதையும் எளிமையாக எடுத்துக் கொள்ளும் குணம் கொண்டவர். எப்போதும் அவரை நன்றாக கவனித்துக்கொள்ளும் என்டி எனும் அன்பான மற்றும் அக்கறையுள்ள கணவர் தமிழுக்கு அமைகிறார்.

மூன் நிலா: இத்தொடரில் எனது கதாப்பாத்திரம் ‘எமி’, ஒரு இல்லத்தரசி. எமி ஒரு அப்பாவிப் பெண். அவரது கணவர் ஜீவா, அவர்பால் உள்ள அதிகப்படியான அன்பு சந்தேகமாக மாறும் குணம் (possessive) கொண்டவர். ஜீவாவின் குணத்தை எமி ஏற்கிறார். மேலும், தன் மீதுள்ள எல்லையற்ற அன்பை வெளிபடுத்தும் விதமாக நம்புகிறார். அவருடைய முழு உலகமும் ஜீவா மட்டுமே. அவரை மகிழ்விக்க எதையும் செய்கிறார் எமி. சமைப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு நன்றாகவும் சமைப்பார் எமி.

  • தொடரின் கதாபாத்திரத்திற்கும் வாழ்க்கையில் உங்களுடைய உண்மையான குணத்திற்கும் ஒப்பிடுகையில் ஏதேனும் ஒற்றுமைகள் இருக்கின்றனவா?

ஜாஸ்மின்: எனது நிஜ வாழ்க்கையில் லெட்சுவின் கதாபாத்திரத்தை அதிகம் பயன்படுத்த முடியும் என்று நினைக்கிறேன். எனது சொந்த கதாபாத்திரத்துடன் சுமார் 40% ஒற்றுமைகள் உள்ளன. விஷயங்களைக் கையாள்வதில் தீவிரமான வலிமையைக் காட்டும் ஞானமும் தைரியமும் கொண்ட ஒரு முன்மாதிரியான சுயாதீனமான பெண், லெட்சு. லெட்சுவைப் போலச் சுயாதீனமாக இருக்க விரும்பும் பெண் இத்தொடரில் காட்டப்பட்டுள்ள லெட்சுவின் கால்தடங்களைப் பின்பற்றலாம்.

ஹேமாஜி

ஹேமாஜி: வழக்கமாக, திட்டங்களில் (projects) நான் வகிக்கும் எந்தவொரு கதாபாத்திரத்திற்கும் எனது உண்மையான குணத்திற்கும் சில ஒற்றுமைகள் இருக்கும்.  எனது அன்றாட வாழ்க்கையில் உரையாடும் முறைகள்,  ஆடை அணியும் விதம், சிக்கல்களைத் தீர்க்கும் திறன், எதிர்மறை மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்தவர்களை முதிர்ச்சியுடன் கையாளும் திறன் போன்ற எனது உண்மையான குணத்தை தமிழ் பிரதிபலிப்பதால் ‘தமிழட்சுமி’ எனக்கு மிகவும் நெருக்கமானது.

மூன் நிலா: அப்பாவித்தனம், முடிவுகளை எடுப்பதற்கு முன் இருமுறை யோசித்தல், நன்றாக சமைத்தல், யோகா மற்றும் உடற்பயிற்சியில் ஆர்வம் கொள்ளுதல், உணர்ச்சிமிக்க மற்றும் எளிய விஷயங்களுக்காக அழுதல், மகிழ்ச்சியான தருணங்களில் மிகவும் மகிழ்ச்சியாக இருத்தல் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய எனது உண்மையான கதாபாத்திரத்திற்கும் எமியின் கதாபாத்திரத்திற்கும் சில ஒற்றுமைகள் இருப்பதைக் கண்டேன். அப்பாவித்தனம் கொண்டிருந்தாலும் வழக்கமாக நான் கண்மூடித்தனமான விஷயங்களை மேற்கொள்ளமாட்டேன்.

  • இத்தொடரில் பணிபுரியும் போது உங்களின் மறக்கமுடியாத தருணங்களைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

ஜாஸ்மின்: அகல்யா (யாஷ்) மற்றும் எனக்கும் இடையிலான சகோதரிகளின் வேதியியல் மற்றும் பிணைப்பைச் சித்தரிக்கும் காட்சி. திரையில் வேதியியல் நன்றாக சித்தரிக்கப்பட்டதோடு மிகவும் உண்மையானதாகவும் காணப்பட்டது. சில நேரங்களில் நடிப்பு என்பது நாம் வாழும் நிஜ வாழ்க்கைக்கும் அப்பாற்பட்டது.

ஹேமாஜி: படப்பிடிப்பின் போது மறக்கமுடியாத தருணங்கள் நிறைய இருந்தன. முக்கியமாக ஒரு அற்புதமான குழு மற்றும் குழுவினருடன் இணைந்து பணியாற்றியது, இத்திட்டத்தை மேலும் சிறப்பித்தது. பலவிதமான அனுபவங்களைக் கொண்ட மூத்த கலைஞர்களுடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சியைத்  தந்தது. இது ஒரு மில்லியன் வாய்ப்புகளில் ஒன்று என்று நான் நம்புகிறேன். இந்தப் பொன்னான வாய்ப்புக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.

மூன் நிலா

மூன் நிலா: காதல் நிறைந்த இரவு உணவு உண்ணும் காட்சி (romantic dinner scene) என்று சொல்வேன். அதிகாலை நேரத்தில் படப்பிடிப்புக் காரணமாக குழுவினர் சோர்வடைந்தனர். மேலும், உணவுகளின் பெயர்கள் உச்சரிக்க சற்று கடினமாக இருந்தன. படப்பிடிப்பைச் சிறப்பாக முடிக்க நான் காதல் உணர்ச்சியை மென்மேலும் கொண்டுவர வேண்டியிருந்தது. அது எனக்கு ஒரு மறக்க முடியாத தருணம்.

  • நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் கட்டங்களில் திரைப்படத் துறையில் நீங்கள் எவ்வாறு கட்டுப்பாடுகளைக் கையாண்டு வந்தீர்கள்?

ஜாஸ்மின் : இத்தொடரின் படப்பிடிப்பு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு முன்பே நிறைவடைந்த போதிலும், ரத்து செய்யப்பட்ட படப்பிடிப்புகள் மற்றும் திரையரங்குகள் மூடலால் எனது பிற திட்டங்கள் பாதிக்கப்பட்டன. நான் தற்போது எனது சமூக ஊடகங்களில் ஆக்கப்பூர்வமாக செயல்படுவதோடு இத்தொடருக்கான விழிப்புணர்வையும் அதிகரித்து வருகிறேன். இவ்வேளையில் சமூக வலைத்தளங்களில் என்னை பின்தொடர்பவர்களுக்கும் இரசிகர்களுக்கும், அவர்களின் எல்லையற்ற அன்பு மற்றும் பெரும் ஆதரவுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

ஹேமாஜி: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு முன்னர் இத்தொடரின் படப்பிடிப்பு முடிவடைந்தது எங்களின் அதிர்ஷ்டமாக இருந்தாலும், படப்பிடிப்பு முடிந்தபின் பிந்தைய தயாரிப்பு நேரத்தை ஒன்றாக செலவழிக்க எங்களால் சந்திக்க முடியவில்லை. வேறு பல தயாரிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இது அனைவருக்கும் கடினமான நேரம் என்றாலும், அதன் அவசியத்தை நான் புரிந்துகொண்டேன்.

மூன் நிலா: தயாரிப்புக்கு பிந்தைய சந்திப்புகள் மற்றும் கூட்டங்களைத் தவிர இத்தொடர் அதிகம் பாதிக்கப்படவில்லை. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது நான் என் நேரத்தின் பெரும்பகுதியை அன்புக்குரியவர்களுடன், குறிப்பாக குடும்பத்தினருடன் செலவிட்டேன். மேலும், எனக்கு ஆர்வமுள்ள விஷயங்களை முயற்சித்தேன்.

  • உள்ளூர் கலைஞர்களுக்கு ஆஸ்ட்ரோ வழங்கும் வாய்ப்புகள் குறித்து உங்கள் கருத்து என்ன?

ஜாஸ்மின்:  பல உள்ளூர் கலைஞர்கள் தங்களின் திறமைகள் மற்றும் திறன்களை வெளிப்படுத்த ஆஸ்ட்ரோ ஒரு முக்கியத் தளமாக செயல்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, ஒரு முன்னணி உள்ளூர் உள்ளடக்க வழங்குநராக ஆஸ்ட்ரோ உயர் தரமான, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் மற்றும் அதன் பார்வையாளர்களுக்கு பொருத்தமான நிகழ்ச்சிகளைக் காண்பிக்க பல இடங்களைத் (slots) திறந்துள்ளது. உறுதியளிக்கும் வகையில் ஆதரவில் கடுமையான உயர்வு உள்ளது என நான் கூறுவேன்.

ஹேமாஜி: ஆஸ்ட்ரோ திறமைமிக்க உள்ளூர் கலைஞர்களுக்காக அவர்களின் உயர்தர திட்டங்களை வெளிப்படுத்த எச்டி அலைவரிசைகள் உட்பட பல்வேறு உள்ளூர் அலைவரிசைகளைத் திறந்து, ஏராளமான உள்ளூர் உள்ளடக்கங்களையும் ஒளிபரப்பி வருகிறது. எவ்வளவுக்கு நல்ல மற்றும் ஆக்கபூர்வமான உள்ளடக்கத்தை வழங்குகிறோமோ, அந்த அளவுக்கு ஆஸ்ட்ரோவும் ஆதரவளிக்கும் என்று நான் நம்புகிறேன். நாம் செய்ய வேண்டியதெல்லாம், முயற்சிகளில் ஈடுபடுவதோடு, உள்ளூர் உள்ளடக்கத் துறையில் பீடுநடை போடும் ஆஸ்ட்ரோ வழங்கும் வாய்ப்புகளைக் கைப்பற்றிக் கொள்வதே ஆகும்.

மூன் நிலா: ஆஸ்ட்ரோ சமீபத்திய காலமாக ஏராளமான வாய்ப்புகளை வழங்கி வருகிறது. தற்ப்போது, ​​ஆஸ்ட்ரோ அலைவரிசைகளில் அதிகமான உள்ளூர் உள்ளடக்கத்தை நாம் காணலாம். அவை சிறந்தவை என நான் கருதுகிறேன்.

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி மற்றும் பிற அலைவரிசைகள் இருப்பதாலும், உள்ளூர் திறமைசாலிகளுக்கு ஆஸ்ட்ரோ முன்னுரிமை அளிப்பதாலும் உள்ளூர் திறமைசாலிகள் பயனடைய அதிக இடங்கள் உள்ளன. ஒரு முன்னணி உள்ளூர் உள்ளடக்க வழங்குநராக, ஆஸ்ட்ரோ எப்போதும் அதன் பார்வையாளர்களுக்கு மதிப்பைச் சேர்க்க உயர் தரமான உள்ளடக்கத்தை உறுதிசெய்கிறது.

எனவே, திறன்மிக்க உள்ளூர் கலைஞர்கள் தங்களின் உயர்தர படைப்புகளைச் சமர்ப்பிப்பதன் மூலம் ஆஸ்ட்ரோ வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உள்ளூர் கலைஞர்களை எப்போதும் ஆதரிக்கும் வேளையில் அவர்கள் பிரகாசிக்கவும் சரியான பார்வையாளர்களை அடையவும் ஒரு பொன்னான தளத்தை வழங்கிய ஆஸ்ட்ரோவுக்கு நன்றி.

  • நீங்கள் தற்போது வேலை செய்யும் ஏதேனும் புதிய திரைப்படங்கள் / தொடர்களைப் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா?

ஜாஸ்மின்:  ஆம், விரைவில் வெளியிடப்படவுள்ள ‘கஜேன்’, ‘பீஷ்மன்’, ‘விமன்’ உள்ளிட்ட சில திரைப்படங்களை வெற்றிகரமாக முடித்துள்ளேன்.

ஹேமாஜி: விரைவில் திரையீடு காணவுள்ள ‘காதல் என்பது சாபமா’ எனும் ஒரு திரைப்படமும் ‘ரம்பா மேனகா ஊர்வசி’ (ஆர்.எம்.ஊ) எனும் ஒரு டெலிமோவியும் என் கைவசம்  உள்ளன. அதுமட்டுமின்றி, நான் தொகுத்து வழங்கிய சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் விரைவில் ஒளிபரப்பப்படும்.

‘தமிழ்லட்சுமி’ தொடரின் இயக்குநர் டாக்டர் விமலா பெருமாள்

மூன் நிலா: ஒருங்கிணைப்பு (patchwork) வேலை இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருவதால் விரைவில் மூன்று திரைப்படங்கள் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளன. இதைத்தவிர, மூன்று திரையரங்கு படங்களிலும் நான் பங்கெடுக்க உள்ளேன். அவற்றின்  படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதால், இது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்.

  • உள்ளூர் திரைப்பட துறையில் கால் பதிக்க விரும்புவோருக்கு உங்களின் ஆலோசனை என்ன?

ஜாஸ்மின் : இத்துறையில் வெற்றிபெற மூன்று தாரக மந்திரங்கள், “கடின உழைப்பு, பொறுமை மற்றும் அர்ப்பணிப்பு” .

ஹேமாஜி: இந்த துறையில் உண்மையிலேயே சிறந்து விளங்க ஆர்வமும் அர்ப்பணிப்பும் முக்கியம். ஒழுக்கம், சுய உந்துதல் (self-motivation) மற்றும் தோல்விகளைக் கண்டு துவண்டு விடாத விடாமுயற்சி உங்களுக்கு தேவை. எல்லாம் ஒரு கற்றல் செயல்முறை என்பதால், எல்லாவற்றையும் நேர்மறையாக எடுத்துக் கொண்டு முன்னேறவும். இது உங்களின் விருப்பம் மற்றும் ஆர்வம் என்றால், அதில் தைரியமாக துணிந்து, தேவையான அறிவைப் பெற்றுக் கொண்டு அதற்காக முன்னேறிச் செல்லுங்கள்.

மூன் நிலா: வாய்ப்புகளைப் கைப்பற்றுங்கள், அதே நேரத்தில் உங்களின் சுயமரியாதையையும் நிலைநிறுத்துங்கள். உங்களை நம்புங்கள், கடினமாக உழையுங்கள். வேறு ஏதேனும் திட்டங்களை ஏற்பதற்க்கு முன் அல்லது அடியெடுத்து வைப்பதற்கு முன் அதனைப்பற்றித் தெரிந்துக் கொள்ள நிறைய தகவல்களைச் சேகரியுங்கள். இத்துறையில் வெற்றிபெற மூன்று தாரக மந்திரங்கள், “பொறுமை, நம்பிக்கை மற்றும் சுய அன்பு” என்று நான் நினைக்கிறேன்.