கோலாலம்பூர் – சிலாங்கூரிலும், கூட்டரசுப் பிரதேசத்திலும் பிளாஸ்டிக் பைகள் (நெகிழிப் பைகள்), பாலிஸ்டிரின் உணவு கலன்கள் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை கடந்த ஜனவரி 1, 2017 முதல் அமலுக்கு வந்தது.
இதற்கு முன்பு, ஒவ்வொரு சனிக்கிழமையும், ‘பிளாஸ்டிக் இல்லா தினம்’ என்ற கொள்கையின் அடிப்படையில் சிலாங்கூரில் கடைபிடிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஜனவரி 1, 2017 முதல், 7 நாளும் பிளாஸ்டிக் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அனைத்துக் கடைகளிலும் இலவசமாக பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை வைத்து வழங்கும் பழக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.
எனினும், தேவைப்பட்டால் வாடிக்கையாளர்கள் 20 காசு கொடுத்து பிளாஸ்டிக் பைகளை வாங்கிக் கொள்ளும் வசதியும் நடைமுறையில் உள்ளது.
இதனிடையே, பேரங்காடிகளிலும், சிறு கடைகளிலும் துணிப் பைகளில் மக்கள் பொருட்கள் வாங்கிச் செல்வதைக் காண முடிகின்ற அதே வேளையில், சாலையோர சிறு கடைகளில் இன்னும் பிளாஸ்டிக் பயன்பாடு இருந்து கொண்டு தான் இருக்கின்றது.
விரைவில் அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சிலாங்கூர், கூட்டரசுப் பிரதேசத்தைத் தொடர்ந்து வரும் ஜூன் மாதம் முதல் பேராக், ஜோகூர் மாநிலமும் பிளாஸ்டிக் பைகளைத் தடை செய்ய முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.