வாஷிங்டன் – அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் எதிர்வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவிருக்கும் நிலையில், அவருடன் மேலும் 5 அமெரிக்க இந்தியர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நுழைகின்றனர்.
அமெரிக்காவின் 318 மில்லியன் மக்கள் தொகையில் ஏறத்தாழ 1 சதவீதத்துக்கும் குறைவான எண்ணிக்கையைக் கொண்ட அமெரிக்க இந்தியர்கள் நாடாளுமன்றம் என்று வரும்போது, அதிரடியாக 5 பேர் இந்த முறை வெற்றி பெற்றிருக்கின்றனர்.
ஏற்கனவே, அமெரிக்க மாநிலமான லூசியானாவின் ஆளுநராக இந்தியரான போபி ஜிண்டால் பதவி வகித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களில் முதன்மை முகமாகப் பார்க்கப்படுபவர் கலிபோர்னியா மாநிலத்தின் முன்னாள் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் கமலா ஹாரிஸ் (மேலே படம்). அமெரிக்க செனட்டராகப் பதவியேற்கும் 52 வயது, கமலா ஹாரிஸ் – அவரது தாயார் தமிழ்நாட்டுப் பெண்மணியாவார். தந்தையார் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த ஆப்பிரிக்க வம்சாவளியினர் ஆவார்.
ஜனநாயக செயல் கட்சியின் சார்பாக பதவியேற்கும் கமலா, அந்தக் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் பார்க்கப்படுகின்றார். அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்பை நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வீழ்த்துவதற்கான அத்தனை சாதக அம்சங்களையும் கொண்டவராக கமலா பார்க்கப்படுகின்றார்.
காங்கிரஸ் எனப்படும் மக்களவையில் அமி பெரா, ரோ கன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால் ஆகியோர் உறுப்பினர்களாக நுழைகின்றனர்.
அமி பெரா மூன்றாவது தவணையாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கின்றார். இதற்கு முன் டாலிப் சிங் சவுந்த் என்பவர்தான் 60 ஆண்டுகளுக்கு முன், முதன் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தொடர்ந்து 3 தவணைகளாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகித்தார். அவரது சாதனைக்கு நிகராக அமி பெராவும் தற்போது 3 தவணைகள் நாடாளுமன்றத்தில் இடம் பெற்று விட்டார்.
கலிபோர்னியாவின் தொழில் நுட்ப வளாகமான சிலிகோன் பள்ளத்தாக்கிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் 40 வயது ரோ கன்னா.
ராஜா கிருஷ்ணமூர்த்தி என்ற தமிழர் இல்லினோய்ஸ் என்ற இடத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் பகவத் கீதையின் மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவி ஏற்றுக் கொண்டார்.
பிரமிளா ஜெயபால் என்ற பெண்மணியும், தமிழகத்தைச் சேர்ந்தவர். இவர் வாஷிங்டனிலிருந்து தேர்வு பெற்றிருக்கிறார்.
அமெரிக்க மக்கள் தொகையில் இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 1 சதவீதம்தான். ஆனால் இந்தியாவுக்கு வெளியே அதிகமான எண்ணிக்கையில் இந்தியர்கள் வாழும் நாடாக அமெரிக்கா திகழ்கின்றது. இதற்கு முன் இந்தப் பெருமையை மலேசியா கொண்டிருந்தது. ஆனால், இப்போது தொடர்ந்து நிகழ்ந்து வரும் குடியேற்றங்களால் அமெரிக்கா முந்திக் கொண்டு விட்டது.
மக்கள் தொகையில் ஒரு சதவீதம்தான் என்றாலும், 5 நாடாளுமன்ற இடங்களை இந்தியர்கள் கைப்பற்றியிருப்பது சாதனையாகக் கருதப்படுகின்றது.