Home Featured நாடு இருமொழித் திட்டம்: “சில பள்ளிகளில் திணிக்கப்படுகின்றது” – இராமசாமி குற்றச்சாட்டு

இருமொழித் திட்டம்: “சில பள்ளிகளில் திணிக்கப்படுகின்றது” – இராமசாமி குற்றச்சாட்டு

627
0
SHARE
Ad

ramasamy-dap-deputy-chief-minister

ஜோர்ஜ் டவுன் – இருமொழித் திட்டம் மீதான தனது எதிர்ப்பைத் தொடர்ந்து தெரிவித்து வரும் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி சில பள்ளிகளில் இருமொழித் திட்டம் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதாகவும், சில பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோர்கள் அவர்களையும் அறியாமல் இந்தத் திட்டத்திற்கு ஆதரவு வழங்கும்படி தந்திரமாக ஏமாற்றப்படுகின்றார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தத் திட்டத்திற்கு ஆதரவு தராவிட்டால், அரசாங்க நிதி உதவிகள் நிறுத்தப்படும் என சில தமிழ்ப் பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் இராமசாமி கூறியுள்ளார். ஆனால், இந்த மிரட்டல்களை விடுத்தது யார் என்பது குறித்து இராமசாமி விளக்கவில்லை.

#TamilSchoolmychoice

யார்மீதும் இருமொழித் திட்டம் திணிக்கப்படவில்லை என கல்வி துணையமைச்சர் ப.கமலநாதன் தெரிவித்துள்ள கருத்துகளுக்கும் இராமசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். இராமசாமியின் கருத்துகள் பிரி மலேசியா இணைய செய்தித் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இருமொழித் திட்டத்தில் 50 பள்ளிகள் பங்கு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், “கமலநாதன், அனைத்துப் பெற்றோர்களும் ஒப்புக் கொண்டுள்ளதாக ஒரே ஒரு பள்ளியை – செயிண்ட் ஜோசப் தமிழ்ப் பள்ளியை – குறிப்பிட்டுள்ளார். ஆனால் மற்ற 49 பள்ளிகளின் நிலை என்ன?” என்றும் இராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்ப் பள்ளிகளில் இருமொழித் திட்டம் அமுலாக்கப்படும் நடைமுறைகளில் சில ஐயப்பாடுகள் நிலவுவதாகவும் இராமசாமி தெரிவித்துள்ளார்.

பள்ளிகளின் ஆங்கிலம் பயன்படுத்துவதற்கு தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் விளக்கியுள்ள இராமசாமி, ஆனால் ஆங்கிலத்தின் பயன்பாட்டினால் தமிழ் மொழியின் பயன்பாடு தமிழ்ப்பள்ளிகளில் சிதைந்துவிடக் கூடாது என்பதுதான் தனது அக்கறை என்றும் இராமசாமி இருமொழித் திட்டத்திற்கான தனது எதிர்ப்பு குறித்துத் தெரிவித்துள்ளார்.