பெங்களூரு – நேற்று சனிக்கிழமை தொடங்கிய பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில், இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் போர்ச்சுகல் பிரதமர் அந்தோணியோ கோஸ்தா (படம்) கலந்து கொள்வார் என கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகத் தொடங்கிய போதே, பலருக்கும் ஒரு சந்தேகம் எழுந்திருக்கும்.
பிரவாசி என்பது வெளிநாட்டு இந்தியர்கள் கலந்து கொள்ளும் மாநாடாயிற்றே – இதில் ஏன் ஓர் ஐரோப்பிய நாட்டின் பிரதமர் கலந்து கொள்கிறார் – என்ற சந்தேகம்தான் அது!
அந்த சந்தேகத்தைப் போர்ச்சுகல் பிரதமர் அந்தோணியோவே நேரடியாகத் தீர்த்து வைத்துள்ளார். தனது இந்திய வருகையை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “போர்ச்சுகல் பிரதமராக இந்தியாவுக்கு மீண்டும் திரும்பி வருவதில் பெருமையடைகிறேன். இந்தியா எனது தந்தை நாடு” எனத் தெரிவித்துள்ளார்.
போர்ச்சுகல் பிரதமர் அந்தோணியோவின் டுவிட்டர் பதிவு….படம்: புதுடில்லியில் வழங்கப்பட்ட மரியாதை அணிவகுப்பை ஏற்றுக் கொள்ளும் அந்தோணியோ கோஸ்தா….
ஆம், நடப்பு போர்ச்சுகல் பிரதமர் அந்தோணியோவின் தந்தையார் கோவா மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவரது தாயார் ஒரு போச்சுகீசிய பெண்மணி. வழக்கறிஞரான அந்தோணியோ கடந்த 2015 நவம்பரில் போர்ச்சுகலின் பிரதமராகப் பதவியேற்றார். இந்திய பூர்வீகத்தைக் கொண்ட ஒருவர் ஐரோப்பிய நாடு ஒன்றின் பிரதமராகப் பதவியேற்பது இதுவே முதன் முறையாகக் கருதப்படுகின்றது.
கோவா மாநிலம், 1961 வரை போர்ச்சுகீசிய காலனிப் பிரதேசமாக இருந்தது. அதற்கு முன்பாக சுமார் 450 ஆண்டுகள் போர்ச்சுகீசியர்கள் கோவா பிரதேசத்தைத் தங்களின் காலனியாக ஆண்டு வந்தனர்.1947-ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்ற போதும், அதற்குப் பின்னரும் கூட கோவா போர்ச்சுகீசிய காலனியாகவே தொடர்ந்து இருந்து வந்தது.
ஆனால், இந்திய அரசாங்கம், போர்ச்சுகல் கோவாவை விட்டு வெளியேற வேண்டும் என கடுமையாக கெடு விதித்ததைத் தொடர்ந்து, 1961-இல் கோவாவை போர்ச்சுகீசியர்கள் கைவிட்டனர். அதைத் தொடர்ந்து இந்தியாவின் ஒரு மாநிலமாக கோவாவும் இணைக்கப்பட்டது.
கோவாவுக்கும், போர்ச்சுகலுக்கும் இடையில் இருந்த 450 ஆண்டுகள் காலனித்துவ ஆட்சியின் காரணமாக பல கலப்புத் திருமணங்கள் நடைபெற்றன. இன்றும் கோவாவில் போர்ச்சுகீசிய கலாச்சாரமும், சில நடைமுறைகளும், வரலாற்றுச் சின்னங்களும் நிலைத்து நிற்கின்றன.
இந்தியா முழுவதையும் பிரிட்டிஷார் ஆண்டுவந்த வேளையில் கோவாவை போர்ச்சுகீசியர்களும், இன்று புதுச்சேரி என்று அழைக்கப்படும் பாண்டிச்சேரி பிரதேசத்தை பிரான்ஸ் நாட்டவர்களும் ஆண்டு வந்தனர் என்பது வரலாற்றின் ஒரு பக்கம்.
போர்ச்சுகல் பிரதமரின் தந்தை நாடு என்ற காரணத்தால்தால், இந்திய மூதாதையரைக் கொண்ட உலக நாடுகளின் தலைவர்களை ஒவ்வொரு பிரவாசி மாநாட்டுக்கும் அழைத்து கௌரவிக்கும் பாரம்பரியத்தின்படி இந்த முறை போர்ச்சுகல் பிரதமரை அழைத்து இந்திய அரசாங்கம் கௌரவிக்கின்றது.
-செல்லியல் தொகுப்பு