பெங்களூர் – பெங்களூரில் நடைபெறும் பிரவாசி பாரதிய திவாஸ் 2017 மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள நூற்றுக்கணக்கான மலேசியப் பேராளர்களுக்கு, நேற்று சனிக்கிழமை இரவு, இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான மலேசியக் கட்டமைப்புத் துறை சிறப்புத் தூதரும், முன்னாள் மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு ஏற்பாட்டில் இரவு உணவு உபரசரிப்பு நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு பேசிய சாமிவேலு, ‘மஇகா தான் நமது எதிர்காலம், அதனை அனைவரும் எப்போதும் எண்ணிப் பார்க்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் அவர் கூறியதாவது:-
“என்னுடைய வீட்டில் இருந்து எனது காரியாலயத்திற்குச் செல்வதற்கு புதிய பாதை இருந்தும் கூட, நான் மஇகா கட்டிடம் வழியாகத் தான் செல்வேன். காரணம் மஇகா தான் மகிழ்ச்சியைத் தந்தது, உயர்வைத் தந்தது, தலைவனாக்கியது. மஇகா தான் நமது குடும்பம். எனவே அதனை எப்போதும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இனி வருடத்தில் 10 நாட்கள் ஒவ்வொரு மாநிலமாகச் சென்று, நமது மஇகா குடும்பத்தினரைச் சந்தித்து, அன்பு பாராட்டத் திட்டமிட்டிருக்கிறேன். சகோதர சகோதரிகளே.. மஇகா தான் நம்மை வாழ வைக்கப் போகிறது. மஇகா தான் சிறந்தவர்களை உருவாக்கி இருக்கிறது” என்று சாமிவேலு உருக்கமாகத் தெரிவித்தார்.
இந்த விருந்து உபசரிப்பில் டான்ஸ்ரீ வடிவேலு, டத்தோ எம்.சரவணன், பேராசிரியர் முனைவர் டத்தோ என்.எஸ்.ராஜேந்திரன், டான்ஸ்ரீ ராமசாமி, டான்ஸ்ரீ வீரசிங்கம், டத்தோ ஜி.ராஜு, டத்தோ அசோஜன், டத்தோஸ்ரீ வேள்பாரி உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செய்திகள் – ஃபீனிக்ஸ்தாசன்