Home Featured இந்தியா பிரவாசி 2017: பாரம்பரிய உடையில் வந்து அசத்திய அமெரிக்க மருத்துவர்! (பிரத்தியேக சந்திப்பு-1)

பிரவாசி 2017: பாரம்பரிய உடையில் வந்து அசத்திய அமெரிக்க மருத்துவர்! (பிரத்தியேக சந்திப்பு-1)

1066
0
SHARE
Ad

dr-ramaprakashபெங்களூர் – பெங்களூரில் நடைபெற்று வரும் 14-வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டின் மூன்றாம் நாளான இன்று, பாரம்பரிய உடையில் வந்து அசத்தினார் அமெரிக்க மருத்துவர் ஒருவர். மாநாட்டில் பண்டிதர் ஜவஹர்லால் நேருவைப் போல் கம்பீரமாக வலம் வந்து கொண்டிருந்தவரை, அணுகி செல்லியலுக்காகப் பிரத்தியேகப் பேட்டி அளிக்க வேண்டும் என்று கேட்ட போது மறுக்காமல் செய்தியாளர்களின் அறை வரை நடந்து வந்து, புன்னகை மாறாமல் பேட்டி அளித்துச் சென்றார்.

எச்.என் ராமபிரகாஷ் எம்.டி. எஃப்ஆர்சிஎஸ்சி (H.N.Ramaprakash M.D.FRCSC) அவர்களின் நேர்காணல்: (ஆங்கிலத்தில் பேசியது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது)

செல்லியல்: உங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள் டாக்டர்?

#TamilSchoolmychoice

டாக்டர் ராமபிரகாஷ்: நான் எச்.என்.ராமபிரகாஷ். நான் கடந்த 1962-ம் ஆண்டு மைசூரில் உள்ள மருத்துவக் கல்லூரில் எனது மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு வெளிநாடு சென்றேன். அங்கு பயிற்சியை முடித்து தற்போது வரை வெளிநாட்டில் வசித்து வருகின்றேன். என்னுடைய உறவுகள் இன்னும் இந்தியாவில் இருக்கிறார்கள். அதனால் அடிக்கடி இந்தியா வந்து அவர்களைச் சந்திப்பேன். என்னுடைய தாய் நாட்டிற்கு ஏதாவது திரும்ப செய்ய வேண்டும் என்ற நோக்கில்  நான் பிறந்த கிராமத்திற்கு அருகிலேயே கடந்த 1982-ம் ஆண்டு மருத்துவ அறக்கட்டளை ஒன்றை நிறுவினோம். அதன் மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வருகின்றோம். அதற்காக அமெரிக்கா, கனடா, இந்தியாவை ஆகிய மூன்று நாடுகளை ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகின்றோம்.

செல்லியல்: இதுவரை எத்தனை பிரவாசி மாநாடுகளுக்கு வந்திருக்கிறீர்கள்?

டாக்டர் ராமபிரகாஷ்: இதற்கு முன்பு 2 பிரவாசி மாநாடுகளில் கலந்து கொண்டிருக்கிறேன். மும்பையில் ஒன்றும், ஹைதராபாத்தில் ஒன்றும் கலந்து கொண்டிருக்கிறேன். இது எனது மூன்றாவது பிரவாசி மாநாடு. இம்மாநாட்டில் என்னுடைய பழைய நண்பர்களைச் சந்திக்க முடிந்தது. புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். கர்நாடக அரசு மிகச் சிறந்த வசதிகளை ஏற்படுத்தியிருந்தது. மொத்தத்தில் இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான பிரவாசி மாநாடாக அமைந்தது.

செல்லியல்: நீங்கள் அணிந்துள்ள பாரம்பரிய உடை மிகவும் கவர்கின்றது. அதைப் பற்றி சொல்லுங்கள்?

டாக்டர் ராமபிரகாஷ்: (புன்னகைக்கிறார்) இது இந்திய பாரம்பரிய உடை. பெரும்பாலான இந்தியர்கள் உடுத்தும் ஒரு உடை. ஆனால் தற்போது இந்தியர்கள் பெரும்பாலும் மேற்கத்திய உடைகள் மீது நாட்டம் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு வகையில் வசதியாகவும் அவர்களுக்கு இருக்கிறது. முழுக்கால் சட்டை அணிந்து வேலைக்குச் செல்வதற்கு அவர்களுக்கு எளிதாக உள்ளது. ஆனால் சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்த உடை மிகவும் பிரபலமானது. இந்தத் தொப்பிக்குப் பெயர் ‘காந்தி தொப்பி’ என்று சொல்வார்கள். மகாத்மா காந்தி அணிந்த போது இந்தத் தொப்பி கவனத்திற்கு வந்தது. சுதந்திரத்திற்காக மக்கள் பாடுபட்ட காலத்தில், காதி, கைத்தறியால் ஆன உடைகளை அணிந்த போது இந்தத் தொப்பியும் பிரபலமாக இருந்தது. இப்போதும் சில நாடுகளில் இந்தத் தொப்பியை அணிகின்றார்கள். நான் கடந்த முறை மகாராஷ்ட்ரா சென்றிருந்த போது சீரடி சாய்பாபா மையத்தில் பலர் இது போன்ற தொப்பி அணிந்திருப்பதைக் காண முடிந்தது. கர்நாடகாவைப் பொறுத்தவரையில் இது போன்ற உடை அணிபவர்களைக் காண முடிவதில்லை. என்றாலும் நான் இதனை அணிவதைப் பெருமையாகக் கொள்கிறேன்.

பெங்களூரைப் பூர்வீகமாகக் கொண்ட மருத்துவர் ராமபிரகாஷ் தற்போது அமெரிக்காவின் ஒர்லாண்டோ நகரில் வசித்து வருவதோடு, மருத்துவச் சேவையையும் வழங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேர்காணல்: ஃபீனிக்ஸ்தாசன்