கண்டஹார் – ஆப்கானிஸ்தானின் தென்பகுதி நகரான கண்டஹாரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் இதுவரையில் 9 பேர் கொல்லப்பட்டனர். 16 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலில் அப்போது அங்கு வருகையளித்திருந்த ஐக்கிய அரபு சிற்றரசு நாட்டின் தூதரும் காயமடைந்தார். அந்தத் தூதர் ஜூமா முகமட் அப்துல்லா அல்-காபி என ஐக்கிய அரபு சிற்றரசுவின் பத்திரிக்கை அறிக்கை தெரிவித்தது. மிகக் கொடூரமான தாக்குதல் இது என்றும் இதனை அந்நாடு வர்ணித்தது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்கத் தலைமையிலான போராட்டத்தில் ஐக்கிய அரபு சிற்றரசு நாடுகளின் இராணுவமும் பங்கு பெற்றிருக்கின்றது. இதன் காரணமாக, பழிவாங்கும் செயலாக தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
மனிதாபிமான அடிப்படையில் நல்லெண்ண வருகை மேற்கொண்டு ஐக்கிய அரபு சிற்றரசு தூதர் குழுவினர் கண்டஹார் வந்து அங்குள்ள ஆளுநர் மாளிகைக்கு அவர்கள் வருகை தந்த சமயத்தில், அவர்களைக் குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
நேற்று மற்றொரு சம்பவத்தில் ஆப்கானிஸ்தானின் புதிய நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 22 பேர் மரணமடைந்ததோடு, 70 பேர் வரை காயமடைந்துள்ளனர்.