சென்னை – சென்னையிலிருந்து பெங்களூருக்கு 30 நிமிடங்களில் சென்று விட முடியும் என்றால் நம்ப முடிகின்றது. ஆம்.. நம்பித்தான் ஆக வேண்டும். அப்படி ஒரு அதிவேக இரயில் திட்டத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ஹைப்பர்லூப் நிறுவனம் இந்தியாவில் செயல்படுத்தவுள்ளது.
மணிக்கு 1200 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் ஆற்றல் கொண்ட இந்த அதிவேக இரயில் திட்டத்தை முதற்கட்டமாக சென்னை – பெங்களூர் இடையில் செயல்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இரு மாநகரங்களுக்கு இடையில், குழாய் போன்ற அமைப்பில் தண்டவாளங்கள் அமைத்து அதனுள் அதிவேக இரயிலை இயங்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழாயின் மேற்பகுதியில் சோலார் தகடுகளும், மேம்பால தூண்களில் காற்றாலைகளும் பொறுத்தப்பட உள்ளன. காந்தப்புல ஆற்றலின் மூலம் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது பாதை அமைக்கும் பணி குறித்து ஜப்பான் மற்றும் சீன வல்லுநர்கள் ஆய்வுகள் செய்து வருகின்றனர். அண்மையில் ஹைப்பர்லூப் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், சென்னை – பெங்களூரு, சென்னை – மும்பை, புனே – மும்பை, பெங்களூரு – திருவனந்தபுரம், மும்பை – டில்லி ஆகிய வழித்தடங்களில் அதிவேக ரயில் பாதை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.