வாஷிங்டன் – அமெரிக்காவின் 45-வது அதிபராக நேற்று டொனால்ட் டிரம்ப் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பதவியேற்றார். அவரது பதவியேற்பு விழாவில் பதவி விலகிச் செல்லும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனும் கலந்து கொண்டனர்.
அமெரிக்க அதிபர்கள் வழக்கமாகப் பதவியேற்கும் நாளான ஜனவரி 20-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு டிரம்ப் பதவியேற்றார்.
பதவியேற்ற பின் ஆற்றிய உரையில், டிரம்ப் கூறிய முக்கிய அம்சங்களில் சில:
- இத்தனை நாளாக அமெரிக்க அரசாங்கங்கள் வெற்றி பெற்றன. ஆனால் மக்கள் மறக்கப்பட்டார்கள். இனி மக்கள் வெற்றி பெறுவார்கள்.
- அமெரிக்க மக்கள் இனியும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள். உங்களின் ஒத்துழைப்போடு அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பான நாடாக, சிறந்த நாடாக உருவாக்குவோம்.
- இனி வெளிநாட்டுக் கொள்கைகள் அனைத்திலும் அமெரிக்காவுக்கே முக்கியத்துவம் வழங்கப்படும்.
- இனி நமது அரசாங்கத்தின் கொள்கை “அமெரிக்கப் பொருட்களை வாங்குங்கள் அமெரிக்கர்களை வேலைக்கமர்த்துங்கள்” என்பதாக இருக்கும். (Buy American, hire American)
- இந்த உலகத்திலிருந்து இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஒழிப்பேன்.
- வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நமது செல்வத்தை தாரை வார்த்துக் கொடுத்தது இனியும் நடக்காது. இனி அனைத்து அம்சங்களிலும் அமெரிக்காவின் முக்கியத்துவமும், அமெரிக்கர்களின் முக்கியத்துவமும் பாதுகாக்கப்படும்.
- இனி வெற்றுப் பேச்சை ஒழிப்போம். செயல்களில் ஈடுபட வேண்டிய தருணம் வந்து விட்டது.
தனது உரையை ஆற்றி முடித்ததும், கிறிஸ்துவ பாதிரியார்களின் வழிபாடு நடைபெற்றது.
அதன் பின்னர், முன்னாள் அதிபர் ஒபாமாவை டிரம்ப் நேரடியாக அழைத்துக் கொண்டு, ஒபாமா செல்லவிருந்த ஹெலிகாப்டர் வாசல் கதவு வரை சென்று வழியனுப்பி வைத்தார்.
முதலில் துணையதிபர் ஜோ பிடன் கார் மூலம் வெள்ளை மாளிகையிலிருந்து கிளம்பிச் செல்ல, அவரைத் தொடர்ந்து ஒபாமா தம்பதிகள் டிரம்ப் தம்பதியர் வழியனுப்பி வைக்க ஹெலிகாப்டரின் மூலம் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினர்.
பத்து நிமிட ஹெலிகாப்டர் பயணத்திற்குப் பின்னர் அண்ட்ரூஸ் இராணுவ விமானப் படைத் தளத்தை அடைந்த அவர்கள் அங்கிருந்து விமானம் மூலம் தாங்கள் குடியேறவிருக்கும் கலிபோர்னியா மாநிலத்தை சென்றடைவர்.
ஹிலாரியைப் பற்றிக் குறிப்பிடாத டிரம்ப்
தனது உரையில் சுமுகமான பதவி மாற்றத்திற்கு வழி வகுத்த பராக் ஒபாமாவுக்கு நன்றி தெரிவித்த டிரம்ப், ஏனோ ஹிலாரி கிளிண்டனின் பெயரைக் குறிப்பிடவே இல்லை. பொதுவாக அதிபராகப் பதவியேற்பவர்கள் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவரின் பெயர் குறிப்பிட்டு ஏதாவது கூறுவது வழக்கமாகும்.
ஆனால், அந்த வழக்கத்திற்கு மாறாக, டிரம்ப் ஹிலாரி குறித்து எதுவுமே கூறாமல் தவிர்த்து விட்டார்.
-செல்லியல் தொகுப்பு