சென்னை – புதுடில்லியிலிருந்து சென்னை திரும்பியுள்ள தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், வாடிவாசல் ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும், காளைகள் துள்ளிக் கொண்டு வெளியே வரும், நானே ஜல்லிக்கட்டைத் தொடக்கி வைப்பேன் என உறுதி கூறியுள்ளார்.
அந்தக் கால ஜல்லிக்கட்டு காளையைக் காட்டும் புகைப்படம்
இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு தொடர்பிலான அண்மையச் செய்திகள் வருமாறு:
- இன்று வெள்ளிக்கிழமை காலை அதிமுகவின் 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவைத் துணைத் தலைவர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்தனர்.
- இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்க உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு தொடர்பான தீர்ப்பு வழங்குவதை அடுத்த ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.
- சட்ட ரீதியாக இந்த விவகாரத்தை அணுகும் விதத்தில் காட்சி விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை அகற்றும் சட்டத் திருத்தத்தை சுற்றுச் சூழல் அமைச்சு வரைந்துள்ளது.
- அவசரச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நாளையே பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
- நாளை சனிக்கிழமை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து நிலவரத்தை விளக்கி, அவசரச் சட்டத்திற்கான ஒப்புதலை வழங்கும்படி கேட்டுக் கொள்வர்.
- தமிழக அரசின் அவசரச் சட்ட வரைவு உள்துறை அமைச்சரின் ஒப்புதலையும், தமிழக ஆளுநரின் ஒப்புதலையும் பெறப்பட்டு அதிபருக்கு சமர்ப்பிக்கப்படும். அதிபர் ஒப்புதல் வழங்கியதும், நாளையே தமிழக அரசின் அவசரச் சட்டம் அமுலுக்கு வரக் கூடும்.
- இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வாடிவாசல் ஜல்லிக்கட்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
- வாடிவாசல் ஜல்லிக்கட்டு நடைபெறும்வரை மாணவர்களின் போராட்டம் ஓயாது என்றும், இருக்கும் இடத்தை விட்டு நகர மாட்டோம் என்றும் ஆங்காங்கு நடைபெறும் மாணவர் போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
- இதற்கிடையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நாங்களும் இருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்காக மு.க.ஸ்டாலினும், கனிமொழியும், தயாநிதி மாறனும் திமுக சார்பில் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.
- திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றால், அதன் மூலம் தமிழக அரசு, மத்திய அரசின் ஒத்துழைப்புடன் இந்தப் பிரச்சனையை சுமுகமாகத் தீர்த்து வைத்த விதத்தில், அதன் செல்வாக்கும், ஆதரவும் நிலைநிறுத்தப்படும் என்றும் தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்தின் செல்வாக்கும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.