Home Featured நாடு நாடற்ற இந்தியர்கள் விவகாரம்: சாஹிட் வெட்கப்பட வேண்டும் – வேதமூர்த்தி சாடல்!

நாடற்ற இந்தியர்கள் விவகாரம்: சாஹிட் வெட்கப்பட வேண்டும் – வேதமூர்த்தி சாடல்!

1016
0
SHARE
Ad

waytha moorthyகோலாலம்பூர் – மலேசியாவில் பிறந்த எத்தனையோ இந்தியர்கள் இன்னும் குடியுரிமை கிடைக்காமல் இருந்து வரும் நிலையில், பிலிப்பைன்ஸ், வங்காள தேசம், பாகிஸ்தான், இந்தோனிசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மலேசியாவிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு எளிதில் குடியுரிமை வழங்கப்படுவது குறித்து அரசாங்கத்திற்கு ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில் ஊத்தான் மெலிந்தாங்கில் துணைப் பிரதமர் சாஹிட் ஹமீடி வெளியிட்ட அறிவிப்பில், இந்நாட்டில் பிறப்புப் பத்திரம் உள்ளிட்ட குடியுரிமை ஆவணங்கள் இல்லாமல் இருக்கும் இந்திய சமூகத்தினருக்கு, அடையாள அட்டை வழங்குவதில் அரசாங்கம் கரிசனம் காட்டாது எனத் தெரிவித்திருந்தார்.

அது போன்ற குடியுரிமைப் பிரச்சினைகள் உள்ள 5,000 இந்தியர்களின் பட்டியலை மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் சமர்ப்பித்துள்ளதைச் சுட்டிக் காட்டிய சாஹிட், அவர்களில் 2,700 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், தேசியப் பதிவு இலாகா அவர்களின் தகுதிகளை ஆராயும் என்றும் சாஹிட் தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

Zahidஇந்நிலையில், அது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள வேதமூர்த்தி, “அண்மையில் ஊத்தான் மெலிந்தாங்கில், இந்திய சமுதாயத்திற்கு அடையாள அட்டை வழங்குவதில் சலுகைகள் வழங்கமாட்டோம் என்று கூறி, சாஹிட் ஹமீடி மீண்டும் தனது கர்வம் மற்றும் அறியாமையை நிரூபித்துள்ளார். இந்நாட்டில் உயர் தலைவர்களில் ஒருவராக இருப்பதற்கு தன்னை நினைத்து அவர் வெட்கி தலைகுனிய வேண்டும். காரணம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண துணிவில்லாமல், தான் வாழ்வதற்காக இதை அரசியலாக்குகிறார்.”

“நான் துணையமைச்சராக இருந்த போது, இந்நாட்டில் குடியுரிமை இல்லாமல், நீல நிற அடையாள அட்டை இல்லாமல் இருக்கும், நாலாம், ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்த சுமார் 3 லட்சம் இந்தியர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முக்கிய ஆய்வறிக்கையை தயார் செய்தேன். ஆனால் அரசாங்கம் இப்பிரச்சினையைத் தீர்க்க தொடர்ந்து மறுத்து வருவதோடு, நாடற்றவர்களாக இருக்கும் இந்தியர்களின் உண்மையான கணக்கையும் ஒப்புக்கொள்ள மறுத்து வருகின்றது.”

indians“மலேசிய இந்தியர்களில் நாலாம், ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தங்களின் மூதாதையர்கள் மலேசியாவில் பிறந்தவர்கள் என்பதை நிரூபிக்க அவர்களால் இயலவில்லை. காரணம் அவர்கள் 1957 மலேசியா சுதந்திரம் அடைந்த போது குடியுரிமையைப் பதிவு செய்யவில்லை. எனவே அரசியலமைப்பு தெளிவாக இருந்தும் கூட அவர்கள் நாடற்றவர்களாக மலேசியாவில் வாழ்ந்து வருகின்றார்கள். அரசாங்கமும், இனவாத அரசாங்க அதிகாரிகளும், இது போன்ற பிரச்சினையுடன் இருக்கும் இந்தியர்கள் குடியுரிமை பெறும் வாய்ப்பினை புதிய கொள்கைகள் மூலம் தடுக்கின்றனர்.”

“தேர்தல் வந்தவுடன் பிரதமர் (டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்), பிரச்சினைகளைத் தீர்ப்பதாக மீண்டும் தனது காலியான ‘நம்பிக்கை வாக்குறுதிகளை’ வழங்குவார். நான் சவால்விடுகிறேன். அவரிடமும் (சாஹிட்) பிரதமரிடமும் நான் சமர்ப்பித்த திட்டங்கள் மலேசிய இந்தியர்களின் பிரச்சினையைத் தீர்க்காது என ஏதாவது குறை கண்டுபிடிக்கட்டும்” என்று வேதமூர்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.