Home Featured நாடு நாட்டின் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்களிப்பை மறக்க முடியாது – நஜிப் புகழாரம்!

நாட்டின் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்களிப்பை மறக்க முடியாது – நஜிப் புகழாரம்!

849
0
SHARE
Ad

Najibபோர்ட்டிக்சன் – இந்நாட்டில் இந்தியர்களின் மேம்பாட்டிற்காக பிரதமர் துறையின் கீழ் சீட் மற்றும் சீடேக் என இரு அமைப்புகளை நிறுவி, இந்தியர்களின் தேவைகளைக் கண்டறிந்து அரசாங்கம் அவர்களுக்கு லட்சக்கணக்கில் கடனுதவி வழங்கி வருவதாகவும், கல்வியில் சிறந்து விளங்கும் இந்திய மாணவர்களுக்கு உயர்கல்வி பயில மெட்ரிக்குலேசனில் 1,500 இடங்கள் வழங்கப்படுவதாகவும் பிரதமர் நஜிப் தெரிவித்தார்.

ஆனால், மூத்த அரசியல் தலைவர்கள் சிலர் தங்களின் சுயலாபத்திற்காக எதிர்மறைக் கருத்துக்களைக் கூறி சமூகத்தைப் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை போர்ட்டிக்சன் லுக்கூட்டில் நடைபெற்ற தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் 60-ம் ஆண்டு மணிவிழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்த நஜிப் தெரிவித்தார்.

மேலும், தமிழ் இளைஞர் மணிமன்றம், தமிழ்மொழி, கலை, கலாசாரம், பண்பாடு உள்ளிட்டவைகளை இந்தியர்களிடத்தில் மேம்படுத்த நாடு முழுவதும் ஆற்றிய சேவைகளைத் தான் இளைஞர் துறை அமைச்சராக இருந்த காலத்தில் நேரடியாகவே பார்த்துள்ளதாகவும், இத்தனை ஆண்டுகளாக இளைஞர் மணிமன்றம் செய்து வரும் சேவைக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் நஜிப் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

மலேசிய மக்கள் தொகையில் 7.4 விழுக்காடு மட்டுமே இந்திய சமுதாயம் இருந்தாலும் கூட, நாட்டின் வளர்ச்சிக்கு இந்தியர்கள் பெருமளவில் பங்காற்றியுள்ளதாகவும் நஜிப் தெரிவித்தார்.

அதோடு, இந்நிகழ்ச்சியில், நெகிரி செம்பிலானில் தமிழ் பள்ளிகள் கட்டுவதற்கான 2.18 மில்லியன் ரிங்கிட் காசோலையையும் நஜிப் வழங்கினார். அதனை அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ மொகமட் ஹசான் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், நாடாளுமன்ற சபாநாயகர் டத்தோஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், மைபிபிபி தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ், இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான மலேசியாவின் கட்டமைப்பு சிறப்புத் தூதர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு, கெராக்கான் உதவித்தலைவர் டத்தோ ஏ.கோகிலன் பிள்ளை உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், “இந்திய இளைஞர்கள் தீய வழிகளில் செல்லாமல், கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் ஈடுபட இளைஞர் மணிமன்றம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், இந்தியர்கள் உலகளவில் எல்லா துறைகளிலும் போட்டி போட்டு முன்னேற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

கடந்த 1956-ம் ஆண்டு  நிறுவப்பட்ட மலேசிய தமிழ் இளைஞர் மணி மன்றம், தமிழ் மொழி, கலை மற்றும் கலாசாரத்தை ஊக்குவித்து வருகின்றது. நாடெங்கிலும் 292 கிளைகளுடன் இயங்கி வரும் தமிழ் இளைஞர் மணி மன்றத்தில் 24,552 உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.