வாஷிங்டன் – குடிநுழைவுத் துறையில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று வெள்ளிக்கிழமை கையெழுத்திட்ட உத்தரவில், அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு 7 நாடுகளின் மக்களுக்குத் தடைவிதித்தார்.
பயங்கரவாதத்திற்கு இந்த நாடுகள் துணைபோகின்றன என்ற அடிப்படையில் டிரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
டிரம்ப் வெளியிட்ட உத்தரவில் அமெரிக்காவில் குடிநுழைவுத் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியதோடு, ஈராக், சிரியா, ஈரான், சூடான், லிபியா, சோமாலியா, ஏமன் ஆகிய பெரும்பான்மை முஸ்லீம் மக்களைக் கொண்ட 7 நாடுகளில் இருந்து மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஒரு மாதத்திற்கு இந்தத் தடை உத்தரவு அமுலில் இருந்து வரும்.
அதே வேளையில், அமெரிக்காவுக்குள் அகதிகளை அனுமதிக்கும் நடைமுறையை அடுத்த 120 நாட்களுக்குத் தடை செய்தும் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
எல்லா பாதுகாப்பு முன்னேற்பாடுகளும், நடைமுறைகளும் ஒழுங்குபடுத்தப்பட்ட பின்னர் மீண்டும் அகதிகளை அனுமதிக்கும் நடைமுறைகள் செயல்படுத்தப்படும்.