Home Featured இந்தியா இந்தியாவின் வரவு செலவுத் திட்டம் – எதிர்பார்ப்புகள் என்ன?

இந்தியாவின் வரவு செலவுத் திட்டம் – எதிர்பார்ப்புகள் என்ன?

939
0
SHARE
Ad

arun-jaitleyபுதுடில்லி – இந்திய வட மாநிலங்களில் வாட்டும் குளிர் ஒருபுறம் – அந்தக் குளிரையே துரத்தியடிக்கும் வண்ணம் சூடேற்றும் தேர்தல் பிரச்சாரங்கள் சில மாநிலங்களில் நடைபெறுவது இன்னொரு புறம் – இவற்றுக்கிடையில் இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் இந்தியாவின் வரவு செலவுத்திட்டம் தாக்கல் செய்யப்படுகின்றது.

பல வகைகளிலும் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளை எகிற வைத்திருக்கிறது இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம். முதல் காரணம், இரயில்வே துறையின் வரவு செலவுத் திட்டத்தோடு இணைக்கப்பட்டு, ஒரே வரவு செலவுத் திட்டமாக இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்படுகின்றது.

கடந்த பல ஆண்டுகளாக இந்திய இரயில்வே இலாகாவின் வரவு செலவுத் திட்டம் தனியாக, வரவு செலவுத் திட்டத்திற்கு ஒரு நாள் முன்பாகவே சமர்ப்பிக்கப்படும். இந்த வரவு செலவுத்திட்டத்தை இரயில்வே அமைச்சர் சமர்ப்பிப்பார்.

#TamilSchoolmychoice

ஆனால், நடப்பு நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இந்த நடைமுறையை மாற்றியுள்ளார்.

இரண்டு வரவு செலவுத் திட்டங்களையும் இணைத்து, ஒரே வரவு செலவுத் திட்டமாக, நிதி அமைச்சின் கீழ் கொண்டு வந்து இன்று சமர்ப்பிக்கிறார் ஜெட்லி.

பண மதிப்பு நீக்கத்திற்குப் பின் தாக்கல் செய்யப்படும் முதல் வரவு செலவுத்திட்டம்

கடந்த ஆண்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த பண மதிப்பு நீக்கம் தொடர்பான சர்ச்சைகளுக்குப் பின்னர் தாக்கல் செய்யப்படும் முதல் வரவு செலவுத் திட்டம் என்பதால், இதன் தொடர்பிலான கூடுதல் திட்டங்கள் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புகளும் நிலவுகின்றன.

மக்களுக்கு நிறைய சலுகைகள் வழங்கப்படும் என்றும், வணிகங்களை ஊக்குவிக்கும் நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

pranab-mukherjeeஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரி தொடர்பிலான சில பொருளாதார மேம்பாடுகளும் அருண் ஜெட்லியின் வரவு செலவுத் திட்ட உரையில் இடம் பெற்றிருக்கும் என்ற நம்பிக்கையும் நிலவுகின்றது.

நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் இணைந்த கூட்டத்தில் நேற்று இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜி (படம்) உரையாற்றினார். அதிபராக அவர் ஆற்றும் வரவு செலவுத் திட்டம் தொடர்பான இறுதியான உரையாகும் இது.

இன்றைய வரவு செலவுத் திட்டம் இந்தியா அடுத்து எந்தப் பாதையில் செல்லப் போகிறது என்பதை எடுத்துக் காட்டும் திட்டமாகவும், பொருளாதார உருமாற்றங்களை அறிமுகப்படுத்தும் திட்டமாகவும் அமையும் என எதிர்பார்க்கலாம்.

-இரா.முத்தரசன்