Home Featured நாடு “5 ஆயிரம் குடியுரிமை – 7 ஆயிரம் பேருக்கு ஆவணங்கள் பெற்றுத் தந்துள்ளோம்” சுப்ரா விளக்கம்

“5 ஆயிரம் குடியுரிமை – 7 ஆயிரம் பேருக்கு ஆவணங்கள் பெற்றுத் தந்துள்ளோம்” சுப்ரா விளக்கம்

770
0
SHARE
Ad

subra-karak-ponggal-1

காராக் – நேற்று காராக் நகரில் நடைபெற்ற 2017-ஆம் ஆண்டுக்கான ம.இ.கா பகாங் மாநில பொங்கல் ஒற்றுமை விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சரும் ம.இ.காவின் தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம், தான் இந்தியர்களுக்கான அமைச்சரவைச் செயலாக்க நடவடிக்கைக் குழுவிற்குப் பொறுப்பேற்றது முதல், மஇகாவின் மூலமாக சுமார் 5 ஆயிரம் இந்தியர்கள் குடியுரிமை பெறுவதற்கும், மேலும் 7 ஆயிரம் இந்தியர்கள் முறையான ஆவணங்கள் பெறுவதற்கும் உதவி புரிந்துள்ளதாக தெரிவித்தார்.

“அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

#TamilSchoolmychoice

அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்

அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே’

என்ற திருமூலரின் திருமந்திரத்தோடு, காராக் பொங்கல் விழாவில் தனது உரையைத் தொடங்கிய சுப்ரா, நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்த பகாங் மாநில ம.இ.கா தொடர்பு குழுவினருக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

தொடர்ந்து டாக்டர் சுப்ரா மஇகா பகாங் மாநில பொங்கல் விழாவில் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

“இன்று இந்நிகழ்ச்சியின் வழி ஒற்றுமையையும் பண்பாட்டையும் வளர்ப்பதற்காக நாம் இங்கு ஒன்றாகக் கூடியுள்ளோம். இதற்கு முன்னதாக பல பொங்கல் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டுள்ளேன். முதன் முறையாக முருகப் பெருமானை நேர் எதிரே பார்த்துக் கொண்டு உரையாற்றும் வாய்ப்பு இன்றுதான் கிடைத்துள்ளது. அதற்காகத்தான் திருமந்திரத்தோடு என் உரையைத் தொடங்கினேன்.

நம் திருமுறையில் 10வது திருமுறை திருமந்திரம். நம் சமயத்தில் இருக்கக்கூடிய தொன்மையையும் அழகையும் தெளிவாகக் எடுத்துக் கூறுவது திருமந்திரம். அதில் இருக்கக்கூடிய கருப்பொருளை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, இவ்வுலகத்தில் இருக்கக்கூடிய மிகப் பெரிய சக்தி யாதெனில் அன்பு. அவ்வகையில், திருமந்திரத்தில் குறிப்பிட்து போல் யார் அன்பை உணர்கின்றனரோ அங்குதான் சிவன் இருக்கின்றார் என்பதை உணர்த்துகின்றது.”

subra-karak-ponggal-3-speechமஇகா பகாங் மாநில தொடர்புக் குழு ஏற்பாட்டில் காராக் நகரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சுப்ரா உரையாற்றுகிறார்…

தலைவர்கள் என்ற அடிப்படையில் அந்த உண்மையை நாம் உணர்ந்தோம் என்றால் எதையும் நாம் அசைக்க முடியும். அன்பால் அசைக்க முடியாதது என்று ஒன்றுமில்லை. அந்த அன்பின் அடிப்படையில் அசையாதது அசையும்; அசைக்க முடியாததையும் அசைக்க முடியும். அதைத்த்தான் திருமூலரும் எடுத்துக் கூறியுள்ளார். அவ்வகையில், நாடு தழுவிய அளவில் பொங்கல் விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் நம்மிடையே நம்பிக்கையையும் அன்பும் வலுப்பெற வேண்டும். தைப் பிறந்தால் வழிப் பிறக்கும் என்பது போல் தை மாதம் பிறந்தாலே நல்ல எதிர்காலம், அதிர்ஷ்டம், செல்வம் என அனைத்தும் பிறக்கப் போகின்றது  என்ற நம்பிக்கை பிறக்கின்றது. அதுதான் பொங்கல் திருநாளின் அடிப்படையாகும்.

மஇகா ஏற்பாட்டில் மாநிலம் வாரியாக பொங்கல் விழாக்கள்

அதன் அடிப்படையில், கடந்த ஆண்டு தொடங்கி ம.இ.கா நாடு தழுவிய தமிழர் விழாவாக இப்பொங்கல் ஒற்றுமை விழாவைப் பண்பாட்டு கலாச்சார அடையாளமாகவும், நம் மொழி சார்ந்த விழாவாகவும் கொண்டாடி வருகின்றது. நம் நாட்டின் பிரதமர் அவர்களின் வருகையோடு கடந்த வாரம் கிள்ளான் வட்டாரத்தில் இவ்விழா கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நெகிரி செம்பிலானில் மாபெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டு இன்று பகாங் மாநிலத்தில் கொண்டாடப்படுகின்றது. தொடர்ந்து, இவ்விழா எல்லா மாநிலங்களிலும் கொண்டாடப்படும். நோக்கம் என்னவென்றால், நம்மிடையே ஒற்றுமையை வளர்த்து நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக!

மனிதனுக்குத் தன்னம்பிக்கை வேண்டும்

மனிதன்  முதலில் தன்னைத் தானே நம்ப வேண்டும்; பிறகு அவர்களுக்கும் எதிர்காலம் இருக்கின்றது என்று நம்பவேண்டும்; அதனைத் தொடர்ந்து இருக்கக்கூடிய தலைவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அதே போல், இருக்கக்கூடிய தலைவர்களும் நம்பகத்தன்மையை மக்களுக்குக் கொடுக்க வேண்டும். நாம் மக்களுக்குக் கொடுக்கக்கூடிய நம்பகத்தன்மையும் மக்கள் நம் மீது வைக்கக்கூடிய நம்பிக்கையும் ஓர் உற்சாகத்தைக் கொடுக்கும். அந்த உற்சாகம்தான் நமக்குச் சத்தியைக் கொடுக்கும். நம்பிக்கையே வெற்றிக்கு முதற்படி.

subra-ponggal-karak-2பொங்கல் விழாவில் திரண்ட காராக் மக்கள்….

வாழ்க்கையில் இறைவன் வெற்றி தோல்வி இரண்டையும் சேர்த்தே படைத்துள்ளான். அவ்விரண்டு வழியிலும்தான் நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். தெளிவாகச் சிந்திக்கக்கூடியவர்கள் நிச்சயம் சோதனைகளைச் சமாளிக்கக்கூடிய வழிகளைத் தேடுவார்கள். தெளிவாகச் சிந்திக்க முடியாதவர்கள் சோதனைகளைக் கண்டவுடன் அனைத்தும் முடிந்தவிட்டது என சோர்ந்து விடுவர். ஆகையினால், தமிழ்ச் சமுதாயம் தெளிவான சிந்தனையோடும் எத்தகைய சோதனைகள் வந்தாலும் அதனை எதிர்கொண்டும் வெற்றிப் பெற வேண்டும். நம்பிக்கையை விதைக்க வேண்டும். அத்தகைய நம்பிக்கையை உங்களுக்குள் விதைக்க வேண்டுமென்பதே தலைவன் என்கின்ற முறையில் எனக்கிருக்கின்ற தார்மீக கடமையாகும்.

மஇகாவில் ஏற்பட்டிருக்கும் ஒற்றுமை

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னதாக ம.இ.காவிலும் பலர் பல திசையில் இருந்தனர். நாம் அனைவரும் ஒன்றாகச் சேர வேண்டும் என்ற ஒரே சிந்தனையின் அடிப்படையில் பல தடங்கல்களுக்கிடையில் புதிய மனப்போக்குடன் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து செயலாற்றியதால், கட்சிக்கு வெளியில் நின்றுக் கொண்டிருந்த பலர் தற்பொழுது மீண்டும் கட்சியில் இணைந்துள்ளனர். நம்முடைய நோக்கம் ஒற்றுமை மட்டுமே. அதற்கு ஒரு சிலர் விட்டுக் கொடுக்கத்தான் வேண்டும். நம்முடைய நோக்கமும் எண்ணமும் தெளிவாக இருப்பதனால் வெற்றிப் பாதைகள் நமக்கு உருவாகியுள்ளன. இது தருமத்தின் உண்மையாகும்.

நாம் மிகவும் சிறுபான்மையான சமுதாயம். பிளவுப்பட்டால் பலவீனப்பட்டு விடுவோம்; ஒன்றுபட்டால் மிகப்பெரிய சத்தியாகத் திகழ்வோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே சத்தியாகத் திகழ்ந்தால் இந்நாட்டில் இந்தியச் சமுதாயம் கேட்கக்கூடிய அனைத்தும் கிடைக்கக்கூடிய அரசாங்கத்தை நாம் உருவாக்க முடியும். அதற்கு முதலில் நம்முடைய குரலும் நோக்கமும் ஒன்றாக இருத்தல் அவசியம்.

2010ஆம் ஆண்டு தொடங்கி ம.இ.காவின் முயற்சியில் அடிப்படையில் தமிழ்ப்பள்ளிகளுக்கு மட்டும் ஏறக்குறைய 74 கோடி ரிங்கிட் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.  அதே போன்று,  சிறுதொழிலில் நம் சமுதாயம் முன்னேற வேண்டும் என்பதற்காக முன்பு மலாய்க்காரர்களுக்கு மட்டும் தெக்குன் வழி கிடைக்கப்பெற்ற உதவியானது 2010ஆம் ஆண்டுத் தொடங்கி இந்தியர்களுக்கும் வழங்கலாம் என்ற திட்டத்தை உருவாக்கியதன் வழி ஏறக்குறைய 80 கோடி வெள்ளி உதவி இந்திய சமுதாயத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. அதனைப் பெற்று ஆயிரக்கணக்கானோர் நாடு தழுவி சிறு தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் கண்டுள்ளனர். அதற்கான முயற்சியை முன்னெடுக்க வேண்டியது சமுதாயத்தின் கடமையாகும்.

கருத்தைத் திரித்துக் கூறிய இராமசாமி

சமீபத்தில் நெகிரி மாநிலத்தில் நடைபெற்ற தமிழ் இளைஞர் மணிமன்றத்தில் 60ஆம் ஆண்டுக் கொண்டாட்ட விழாவில் ஓர் அருமையான கருத்தைப் பதிவு செய்திருந்தேன். அதாவது,  இப்பொழுது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலமானது உலகளாவிய சந்தையாகும். தற்பொழுது அனைவரும் கணினியின் மூலமாகவும் இணையம் வழியாகவும் வியாபாரங்கள் செய்யத் தொடங்கி விட்டனர். அதன் அடிப்படையில் நமது சமுதாயமும் இணைய வியாபாரத்தில் ஈடுபடக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதில் சிறந்த எதிர்காலம் இருப்பதாகவும் ஓர் அறிவுப்பூர்வமான கருத்தைக் கூறியிருந்தேன். அக்கருத்துக்கு எடுத்துக் காட்டாக முறுக்கு வியாபாரம் கூட இணையம் வழியாகச் செய்யலாம் என்று கூறியிருந்தேன்.

ponggal-subra-karak-4

ஆனால், அந்த அறிவுப்பூர்வமான கருத்தைப் புரிந்து கொள்ளும் தன்மை இல்லாதவர்கள் ம.இ.கா தலைவர்களுக்கு முறுக்கு வியாபாரம் மட்டும்தான் தெரியுமா என்று திரித்துப் பேச ஆரம்பித்து விட்டனர். இப்படிப் பேச ஆரம்பித்தவர் யார் என்று பார்த்தால் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வராக இருக்கக்கூடிய ஒரு பேராசியர். அவரிடம் இருக்கக்கூடிய குறுகிய சிந்தனையால் அறிவுப்பூர்வமாக நான் கூறிய கருத்தைச் சிறுமைப்படுத்தி விட்டார். இது ஒரு தலைவனுக்கு எடுத்துக்காட்டல்ல.

இணையம் வழிச் சென்றுக் கொண்டிருக்கும் இத்தகைய காலக்கட்டத்தில் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்றால் நம்மிடையே சிந்தனை மாற்றம் அவசியமாகின்றது. ஏனென்றால், நாங்கள் வாழ்ந்து வந்த காலக்கட்டம் வேறு இப்போதைய இளைஞர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் வேறு. அப்படி இருக்கக்கூடிய காலக்கட்டத்தில் நாம் ஒதுங்கி இருக்க முடியாது. உலக மாற்றத்திற்கு ஏற்றவாறு நாம் மாறிக் கொண்டுதான் வரவேண்டும். இத்தகைய மாற்றம் நம் சமுதாயத்தினரிடையே மிக மிக அவசியம்.

5,000 பேருக்கு குடியுரிமை – 7,000 பேருக்கு ஆவணங்கள்

அதனைத் தொடர்ந்து, ம.இ.காவின் முயற்சியின் அடிப்படையில் நாட்டில் ஏறத்தாழ 5000 இந்தியர்களுக்குப் குடியுரிமையைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். இன்னும் 4000 பேருடைய விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. நாடு தழுவிய அளவில் கடந்த 2, 3 ஆண்டுகளாக 200 இடங்களுக்குச் சென்று இப்பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு வழி வகுத்துள்ளோம். குடியுரிமை, அடையாள அட்டை, பிறப்புப் பத்திரம் என மொத்தமாக 7000 பேருக்கு உரிய ஆவணங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளோம்.  நாங்கள் இவையெல்லாம் செய்திருக்கிறோம் என்று யாருக்குத் தெரியும் என்றால் கண் பார்வை உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும். பார்வை இல்லாதவர்களுக்குத் தெரியப்போவதில்லை.

இது மிகவும் கவலைக்கிடமான உண்மையாகும். ஏனென்றால், நாம் என்ன செய்தாலும் அவர்களுக்குத் தெரியாது. நாம் என்ன சொன்னாலும் அவர்களுக்கு கேளாது. அவர்களைப் பொறுத்தவரையில் சமுதாயத்தின் எதிர்காலத்தை அடகு வைத்து சீர்குலைக்க வேண்டும். பத்திரிகைகளுக்கு வியாபாரம் பெருக்க வேண்டும். தற்பொழுது பத்திரிகை செய்திகள் என்பது வியாபாரமாகி விட்டது. அவர்களுடைய தேவைகளுக்கு ஏற்றவாறு செய்திகள் எழுதத் தொடங்கி விட்டனர். ஒரு சமுதாயத்தை வளர்க்க வேண்டுமென்ற எண்ணத்தோடு செய்யவில்லை. இதனைக் கண்டு மக்கள் குழப்பம் அடைய விடக்கூடாது. சமுதாயத்தை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஊடகத்துறையினருக்கு இருந்திருந்தால் நாம் செய்கின்ற நல்லக் காரியங்களை மக்களுக்குக் கூறுவர். அந்நெறி இல்லாத காரணத்தால் இத்தகைய சூழல் ஏற்பட்டுள்ளது.

செய்ய வேண்டியதைச் செய்தேன் என்ற நிம்மதியோடு பதவி விலகுவேன்

என்னைப் பொறுத்தவரையில், என் பதவியை நான் விட்டுப் போகும்பொழுது என் மனத்தில் ஒரு நிம்மதி வரவேண்டும். நம் சமுதாயத்திற்கு நல்லது செய்திருக்கிறேன் என்ற நிம்மதியின் அடிப்படையிலேயே நான் இந்தப் பதவியை விட்டுப் போக வேண்டும். அதற்காக நேரத்தையும், சிந்தனையையும், உணர்வையும் முழு மனதாக அர்ப்பணிக்க நான் தயாராக இருக்கின்றேன். அதற்கு எனக்கு மிகப்பெரிய சக்தி தேவை. அந்தச் சக்தி யாதேனில் சமுதாயமே ஆகும்”

-மேற்கண்டவாறு டாக்டர் சுப்ரா காராக் பொங்கல் விழாவில் உரையாற்றினார்.