Home Featured தமிழ் நாடு சென்னைக்கு வர அஞ்சி ஒதுங்கும் ஆளுநர்!

சென்னைக்கு வர அஞ்சி ஒதுங்கும் ஆளுநர்!

620
0
SHARE
Ad

vidyasagar-rao

சென்னை – சசிகலா முதல்வராகப் பதவியேற்க போயஸ் கார்டனில் தயாராகிக் கொண்டிருக்க, அவர் பதவியேற்பு விழாவுக்கான மண்டபமாக சென்னைப் பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு விழா மண்டபம் அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருக்க, திமுக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளும், பொதுமக்களில் ஒரு பிரிவினரும் சசிகலாவுக்கு எதிர்ப்பு காட்டி முஷ்டி தட்ட,

இன்னொரு மூலையில் இருந்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கனல் பேட்டிகளை வழங்கிக் கொண்டிருக்க,

#TamilSchoolmychoice

என்ன செய்யப் போகிறார் என அனைவரும் காத்திருக்கும் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மட்டும் ‘பார்ட்டி எஸ்கேப்’ என்று கூறும் அளவுக்கு சென்னைப் பக்கம் வராமல் புதுடில்லி, மும்பை என அலைந்து கொண்டிருக்கிறார் எனத் தெரிவிக்கின்றன ஊடகங்கள்.

சட்ட விளக்கங்கள் பெறுகிறேன் எனக் கூறி, அரசாங்கத்தின் தலைமை வழக்கறிஞரின் சட்ட ஆலோசனையைப் பெற்றிருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். இன்னும் எத்தனை நாளைக்கு புதிய முதல்வர் நியமனத்தை ஒத்திவைக்க தனக்கு அதிகாரம் உண்டு என்பது ஆளுநர் கோரியிருக்கும் விளக்கங்களுள் ஒன்று எனக் கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தின் பதவி விலகலை உடனடியாக ஆளுநர் ஏற்றிருக்கக் கூடாது என்றும், தான் அடுத்த முதல்வரை நியமிக்கும் வரை இடைக்கால முதல்வராக இருந்து வாருங்கள் என ஓ.பன்னீர் செல்வத்தை அவர் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது.

இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை வரை வித்யாசாகர் ராவ், சென்னை திரும்பவில்லை. புதுடில்லி சென்ற அவர் அங்கிருந்து மும்பை சென்றுவிட்டதாகவும் அங்கிருந்து எப்போது சென்னை திரும்புவார் என்ற அதிகாரபூர்வ தகவல் எதுவும் இல்லை.

sasikala834-600சசிகலா…

உண்மையிலேயே, அவர் பணிகள் காரணமாக மும்பையில் தங்கியிருக்கிறாரா அல்லது எங்கே சென்னை வந்தால், சசிகலாவை முதல்வராக்க வேண்டுமே என்பதைத் தவிர்க்க, சென்னை வர அஞ்சி மும்பையில் தங்கியிருக்கிறாரா என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.

எனினும், அடுத்த ஒரு வாரத்திற்கு சசிகலாவின் பதவியேற்பை ஒத்திவைக்க முடியாது –  பன்னீர் செல்வத்தின் பதவி விலகலை ஆளுநர் ஏற்றுக் கொண்டுவிட்டதால், முதல்வர் பதவியைக் காலியாகத் தொடர்ந்து வைத்திருக்கவும் முடியாது என்ற ஒரு சட்டக் கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

அதிமுகவின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரே குரலில் ஏகமனதாக சசிகலாவை முன்மொழிந்துள்ளதால், கட்சியில் குழப்பம் என்ற காரணத்தையும் காட்ட முடியாது.

வழக்கு நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக காத்திருப்பதால் இப்போதைக்கு நியமிக்க முடியாது என்றும் ஆளுநர் முடிவெடுக்க முடியாது. காரணம், இதே வழக்கின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதுதான் ஜெயலலிதாவும் முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.

எனவே, சட்டப்படி அனைத்து முனைகளிலும் நிலைமை சசிகலாவுக்குச் சாதகமாக இருப்பதால், அநேகமாக நாளை சென்னை திரும்பி சசிகலாவின் பதவிப் பிரமாணத்தையும், அமைச்சரவை உறுப்பினர்களின் பதவிப் பிரமாணத்தையும் ஆளுநர் நடத்தி வைப்பார் என்ற எதிர்பார்ப்பு தற்போது நிலவுகின்றது.

இல்லாவிட்டால், ஏதாவது ஒரு சட்டக் காரணம் காட்டி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை சசிகலாவின் பதவியேற்பை ஒத்திவைக்கக் கேட்டுக் கொண்டு, அதுவரை பன்னீர் செல்வத்தையும், நடப்பு அமைச்சரவையையும் இடைக்காலத்திற்கு பதவிகளில் தொடரும்படி கேட்டுக் கொள்ளும் முடிவை ஆளுநர் எடுப்பார் என்ற ஒரு மாற்றுக் கருத்தும் நிலவுகின்றது.

-செல்லியல் தொகுப்பு