பெய்ஜிங் – எச்ஐவி தொற்று / எய்ட்ஸ் நோய்க்கு மேற்கத்திய மருந்துகளோடு, சீன பாரம்பரிய மருத்துவத்தையும் இணைக்கப் போவதாக சீனாவின் தேசிய கவுன்சில் அறிவித்திருக்கிறது.
கடந்த 2015-ம் ஆண்டைக் காட்டிலும் தற்போது எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு பாரம்பரிய மருத்துவச் சிகிச்சை வழங்குவது இரட்டிப்பாகி இருப்பதாகவும் அந்நாட்டு தேசிய கவுன்சில் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த பாரம்பரிய மருத்துவப் பிரிவுகளும், தேசிய சுகாதார மற்றும் குடும்ப ஆணையமும் இணைந்து இந்த புதிய முறையைத் திட்டமிட்டிருக்கின்றன.
சீனாவின் தேசிய கவுன்சில் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, தேசிய மருந்துப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட சீனப் பாரம்பரிய மருந்துகளை நோயாளிகளுக்குப் பரிந்துரைப்பதற்கு 450,000 மருத்துவர்கள் இருக்கிறார்கள்.
நவீன சுகாதார முறைப்படி, சீன அரசு இந்த பாரம்பரிய மருந்துகளோடு இணைந்த மருத்துவ முறைகளின் மூலம் செலவைக் கட்டுப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது.
கடந்த 2015-ம் ஆண்டு அறிக்கையின் படி, சீனாவில் 2014-ம் ஆண்டு இறுதியில் மட்டும், 501,000 பேருக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.