புத்ரா ஜெயா – மஇகா பத்து தொகுதியின் முன்னாள் செயலாளர் ஏ.கே.இராமலிங்கம் மற்றும் எழுவர் அடங்கிய குழுவினர் சங்கப் பதிவகம்-மஇகாவுக்கு எதிராக தொடுத்திருந்த வழக்கு பூர்வாங்க ஆட்சேபங்களின் அடிப்படையில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தால் கடந்த 11 ஜூலை 2016-இல் தள்ளுபடி செய்யப்பட்டது.
அந்தத் தீர்ப்புக்கு எதிராக இராமலிங்கம் குழுவினர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு (Court of Appeal) செய்திருந்த மேல்முறையீட்டை 10 ஜனவரி 2017-ஆம் நாள் விசாரித்த நீதிமன்றம் அந்த வழக்கை பூர்வாங்க ஆட்சேபங்களின்படி தள்ளுபடி செய்திருக்கக் கூடாது என்று கூறி, மீண்டும் அந்த வழக்கின் முழு விசாரணையும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடத்த வேண்டுமென தீர்ப்பு கூறியது.
இதனைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்புக்கு எதிராக மீண்டும் மேல்முறையீடு செய்வதென்றால் கூட்டரசு நீதிமன்றத்திற்குத்தான் மேல் முறையீடு செய்ய வேண்டும். அதற்குரிய கால அவகாசமான ஒரு மாதம், பிப்ரவரி 10-ஆம் தேதியோடு முடிவடைந்தது.
அதாவது, தீர்ப்பில் அதிருப்தி கொண்ட தரப்பு, தீர்ப்பு வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள், தாங்கள் கூட்டரசு நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்ய விழைகிறோம் என எழுத்து பூர்வமாக நீதிமன்றத்தில் மனு ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னரே உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்நிலையில், மஇகா மற்றும் சங்கப் பதிவகம் தரப்பினர் இந்த மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, கூட்டரசு நீதிமன்றத்திற்கு பிப்ரவரி 10-ஆம் தேதிக்கு முன்னரே தங்களின் சார்பிலான மனுக்களைச் சமர்ப்பித்து விட்டனர் என நம்பத்தகுந்த மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கூட்டரசு நீதிமன்ற மேல்முறையீடு எப்படி இருக்கும்?
கூட்டரசு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எல்லா வழக்குகளும் அப்படியே எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
நாட்டின் அரசியல் சாசன விவகாரங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் – சட்ட முரண்பாடுகளைக் கொண்ட வழக்குகள் – முதன் முதலாக விசாரணைக்கு வரும் சட்ட அம்சங்கள் – சட்டத் துறை தெரிந்து கொள்ள வேண்டிய, விளக்கமும் பதிலும் பெற வேண்டிய சட்ட நுணுக்கங்களைக் கொண்ட வழக்குகள் மட்டுமே கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
அதன்படி, மேல்முறையீடு செய்யும் தரப்பினர் முதல் கட்ட விசாரணையில் ஏன் இந்த வழக்கு கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளால் விசாரிக்கப்பட வேண்டும் என்ற விவரங்களைக் கொண்ட வாதங்களை முன்வைப்பார்கள். அவை ஏற்றுக் கொள்ளப்பட்டால் மட்டுமே, பின்னர் மேல் முறையீட்டின் முழு விசாரணையும் கூட்டரசு நீதிமன்றத்தில் நடைபெறும்.
இப்போதுதான் மேல்முறையீட்டுக்கான மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், சட்ட நடைமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்பட்டு, மேல்முறையீடு தொடர்பான கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவு தெரிய குறைந்த பட்சம் ஆறுமாதங்களாவது ஆகலாம் என இதுபோன்ற மேல்முறையீடுகளில் அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே சமயம் மேல் முறையீட்டுக்கான அனுமதியை கூட்டரசு நீதிமன்றம் வழங்கி, மேல்முறையீடு தொடர்பான முழு விசாரணையும் நடைபெறுமானால், ஆறு மாதங்களுக்கும் கூடுதலான காலம் பிடிக்கலாம் என்றும் அந்த வழக்கறிஞர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேல்முறையீடு மீதான அந்த வாதங்கள் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால், கூட்டரசு நீதிமன்றம் மேல் முறையீட்டை நிராகரித்து, இந்த சங்கப் பதிவக-மஇகா வழக்கை, மீண்டும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு – மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் 10 ஜனவரி 2017 தீர்ப்புப்படி – அனுப்பும்.
அதன் பின்னரே ஆரம்பத்திலிருந்து விசாரணை தொடங்கப்பட்டு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்படும்.
-இரா.முத்தரசன்