பெங்களூர் – பெங்களூர் நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை சரணடைந்த சசிகலா, தனக்கு நீரிழிவு நோய் இருப்பதால், சிறையில் வீட்டு உணவு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால், பெங்களூர் நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்தது.
தினமும் வீட்டு உணவு, முதல் வகுப்பு அறை, இளவரசியுடன் ஒரே அறை, தனிக்கட்டில், தொலைக்காட்சி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட வசதிகளை வழங்க சசிகலா கோரிக்கை வைத்திருந்தார்.
அதனை விசாரணை செய்த பெங்களூர் நீதிமன்ற நீதிபதி, அது போன்ற வசதிகளை செய்து கொடுக்க முடியாது என்று நிராகரித்தார்.
மேலும், சசிகலா தினமும் மெழுகுவர்த்தி தயாரிக்கும் பணியை செய்ய வேண்டும் என்றும், அதற்கு தினமும் அவருக்கு 50 ரூபாய் சம்பளம் கொடுக்கப்படும் என்றும், வாரம் ஒருமுறை விடுமுறை வழங்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
அதேபோல், நீரிழிவு நோய் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தனி மருத்துவரை வைக்க அனுமதி வழங்க முடியாது என்று கூறிய நீதிபதி, சிறையில் சசிகலாவிற்கு முறையான சிகிச்சைகள் அளிக்க வேண்டும் என சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.