Home Featured தொழில் நுட்பம் அமேசான் இந்திய மின்னூல்கள் எண்ணிக்கையில் தமிழ் முதலிடம்!

அமேசான் இந்திய மின்னூல்கள் எண்ணிக்கையில் தமிழ் முதலிடம்!

977
0
SHARE
Ad

Amazon_Kindle_logo.svgகடந்த ஆண்டு இறுதியில், அமேசான் நிறுவனம், ஐந்து இந்திய மொழிகளில் மின்னூல்களின் விற்பனையைத் தொடங்கியது. தமிழ், இந்தி, மராத்தி, குசராத்தி, மலையாளம் ஆகிய மொழிகளே அவ்வைந்து மொழிகள். திறன்கருவிகளில் இயங்கும் அமேசானின் கிண்டில் செயலிகளிலோ, மின்னூல்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் கிண்டில் கருவிகளிலோ, இந்த நூல்களை வாசிக்கலாம்.

அமேசானின் இந்திய இணைய தளத்தில், இதுவரை இந்த மொழிகளில் விற்பனைக்கு வந்துள்ள நூல்களைக் காணலாம். மொத்தமுள்ள 3,896 இந்திய மொழி நூல்களில், தமிழில் 1374 நூல்கள் உள்ளன. மிகவும் நெருங்கிய இரண்டாம் நிலையில் இந்தி 1315 நூல்களைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் கடந்த ஒருசில மாதங்களில் சேர்க்கப்பட்ட நூல்கள்.

amazon-Indian_Language-kindle-ebooks-

அதிகம் விற்கப்படுபவை
#TamilSchoolmychoice

அதிகம் விற்கப்படும் நூல்களின் தலைப்புகளை மணிக்கொருமுறை புதுப்பித்துப் பட்டியலிடுகின்றது இந்தத் தளம்.  எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய “மறைக்கப்பட்ட இந்தியா”, கிரேசி மோகன் எழுதிய “அமெரிக்காவில் கிச்சா”, ச. ந. கண்ணனில் “ராஜராஜ சோழன்” முதலிய தலைப்புகள் இந்தப் பகுதியில் தற்போது பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால் மொத்தம் எத்தனை தமிழ் நூல்கள் இதுவரை கிண்டிலில் பெறப்பட்டுள்ளன, எவ்வளவு விரைவாக விற்பனை நடந்து கொண்டிருக்கிறது போன்ற விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. அமேசான் நிறுவனமே இதுபோன்ற விவரங்களை வெளியிட வாய்ப்பில்லை. இருந்தாலும், விற்கப்படும் நூல்களின் பட்டியல் எவ்வளவு வேகமாக மேம்பட்டு வருகிறது, ஒரு நூலை வாங்கும் போது, அந்த நூலை வாங்கியோர் வேறெந்த நூல்களை வாங்கியுள்ளனர், போன்ற விவரங்கள் தளத்திலேயே கிடைக்கின்றன. இவற்றை வைத்துப் பார்க்கும்போது, ஏதோ ஒரு எண்ணிக்கையில் தமிழ் மின்னூல்களை வாங்கத் தொடங்கி உள்ளனர் என்பது மட்டும் நமக்கு நன்றாகத் தெரிகிறது.

இந்த முன்னேற்றம் தமிழ் நூல்களுக்குத் தேவைப்படும் ஒரு மாற்றம் என்றே கருதுகிறோம். நூல்களை அச்சுவடிவில் வெளியிடத் தேவைப்படும் பொருட்செலவு குறைகின்றது – எனவே நூல்களின் விலையும் குறைகிறது. செலவு குறைவது மட்டுமின்றி வேறு பல பயன்களும் நூல்களை மின்னூல்களாக வெளியிடுவதில் நமக்குக் கிடைக்கின்றன.

அமேசானில் தற்போதுள்ள நூல்கள், ஏற்கனெவே அச்சு வடிவில் வெளிவந்த நூல்களே.

மின்னூல்களையே முதன்மைத் தேர்வாக விரும்பும் போக்கு உலகளாவிய நிலையில் தோன்றி வருகிறது. அதிகமான தமிழ் வாசகர்களும் இதில் இழுக்கப்படுவர் என்பதில் ஐயமில்லை. அப்போது, புதிய நூல்களை மின்னூலாகவும், அல்லது மின்னூலாக மட்டும், பதிப்பிப்பதற்கான நம்பிக்கையை தமிழ் எழுத்தாளர்களுக்கு ஊட்டும். இந்த மாற்றம், தமிழில் அதிகமான நூல்களை நமக்குத் தரும் என்றே எதிர்பார்ப்போம்!

அமேசான் இந்தியாவில் மட்டுமே!

அமேசானின் இந்திய தளத்தில் மட்டுமே இந்த நூல்கள் தற்போது விற்கப்படுகின்றன. மற்ற நாடுகளில் அமேசான் கணக்ககை வைத்திருப்போர் இந்தப் பக்கத்திற்குச் சென்று நூல்களின் அட்டைகளைக் காணமுடிந்தாலும், நூல்களை வாங்க வாய்ப்பில்லை. “இந்தத் தலைப்பு உங்கள் நாட்டில் இல்லை” என்னும் செய்திகள் மட்டுமே தலைப்புகளின் கீழ் வருகின்றன. தமிழ் மின்னூல்கள் கிண்டிலுக்கு இன்னும் புதியவையே. அதிகமானோர் மின்னூல்களை வாங்கி, வாசித்து வந்தால், நூல்களின் எண்ணிக்கையும், அவை கிடைக்கும் நாடுகளின் எண்ணிக்கையும் கூடும் என்று எதிர்ப்பார்க்கலாம்!

நன்றி: செல்லினம்