கோலாலம்பூர் – வட கொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாம் (படம்) கோலாலம்பூரில் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்று வியாழக்கிழமை இங்குள்ள வடகொரியத் தூதரகத்திற்கு வருகை தந்து மலேசியக் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அவர்கள் வடகொரியத் தூதர் காங் சோல்’லைச் சந்தித்து வாக்குமூலம் பெற முயற்சிகள் மேற்கொண்டதாகத் தெரிகிறது.
இன்று பிற்பகல் ஏறத்தாழ 12.50 மணியளவில் அவர்கள் வட கொரியத் தூதரகம் வந்து அங்கு சுமார் பதினைந்து நிமிடங்கள் இருந்த பின்னர் வெளியேறினர்.
இருப்பினும் அங்கு வந்த காவல் துறை அதிகாரிகள் பத்திரிக்கையாளர்களிடம் எதுவும் பேச மறுத்துவிட்டனர். “எங்களின் தலைவர் (பாஸ்) அறிக்கை விடுவார்” என்று மட்டும் அவர்கள் கூறினர்.
இந்த வருகைக்குப் பின்னர் சுமார் ஒரு மணிநேரம் கழித்து பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்திய துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான அகமட் சாஹிட் ஹாமிடி, கேஎல்ஐஏ 2 விமான நிலையத்தில் கொல்லப்பட்ட “கிம் சோல்” என்ற பெயர் கொண்டவர் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் அன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நம் என்பவர்தான் என்பதை உறுதிப்படுத்தினார்.
கொலை சம்பவத்திற்குப் பின்னர் வடகொரியத் தூதரகம் பரபரப்பான மையமாக உருமாறியுள்ளது. பத்திரிக்கையாளர்கள் அங்கே குழுமியுள்ளனர். ஆனால் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
பலர் உள்ளே வந்து சென்றாலும், யாரும் பத்திரிக்கையாளர்களிடம் பேச முன்வரவில்லை.
இதற்கிடையில் திறந்திருந்த தூதரகக் கதவுகளின் வழியே ஒரு பத்திரிக்கையாளர் தனது கைத்தொலைபேசியின் மூலம் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த பாதுகாவலர் ஒருவர், அந்தக் கைத்தொலைபேசியைப் பிடுங்கி அதிலிருந்து வடகொரியத் தூதரகப் புகைப்படங்களை அழித்து விட்டு, மீண்டும் உரியவரிடமே அந்தக் கைத் தொலைபேசியைத் திரும்பவும் கொடுத்தார்.
3 பேர் கைது
வடகொரிய அதிபரின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜோங் நம்’மைக் கொலை செய்ததாக நம்பப்படும் இரு பெண்களும் இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டனர்.
29, 25 வயதான அந்த இரு பெண்களையும், 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஷாரிஃபா முகாய்மின் அப்துல் காலிப், உத்தரவிட்டார்.
மேலும் மூன்றாவது நபர் ஒருவரும் இந்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கைது செய்யப்பட்ட பெண்மணிகளில் ஒருவர் இந்தோனேசிய நாட்டின் கடப்பிதழை வைத்திருந்தார் என்பதால், இங்குள்ள இந்தோனேசியத் தூதரகம் அந்தப் பெண்மணியை விசாரிக்க மலேசிய வெளியுறவு அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளது.