கோலாலம்பூர் – தான் கொல்லப்படுவோம் என்று முன்பே தெரிந்திருந்தும் கூட, அதனை சட்டை செய்யாமல் இயல்பு வாழ்க்கை வாழ ஆசைப் பட்ட வடகொரிய அதிபரின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜோங் நம், கிம் ஜோல் என்ற பெயரில் போலி கடப்பிதழ் தயாரித்து, தனக்குப் பிடித்த நாடுகளுக்குச் சென்றதோடு, அதே பெயரிலேயே பேஸ்புக் பக்கம் ஒன்றில் படங்களை பதிவேற்றம் செய்து வந்திருக்கிறார்.
அதுவே அவரது இருப்பிடத்தையும், செயல்பாடுகளையும் எதிரிகளுக்குக் காட்டிக் கொடுத்துவிட்டதாகக் கூறுகிறார் தென்கொரிய அதிபரின் முன்னாள் உளவுத்துறை செயலாளர் சா டு ஹையோங்.
“கிம் ஜோங் நம் கவனக்குறைவாக இருந்திருக்க வாய்ப்பிருப்பதாக நான் நினைக்கிறேன். அதுவே அவரது இறப்பிற்குக் காரணமாக அமைந்துவிட்டது.” என்று சா டு ஹயோங் கூறியதாக ‘என்கே நியூஸ்’ என்ற செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.
கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து பேஸ்புக்கில் படங்களைப் பதிவு செய்து வரும் கிம் ஜோங் நம், பிரான்ஸ், சிங்கப்பூர், ரஷியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்றிருப்பதோடு, அங்கு தான் சந்தித்த நண்பர்களுடன் படமெடுத்து அதை தனது பேஸ்புக்கில் பதிவு செய்திருக்கிறார்.
அதேவேளையில், மலேசியாவிற்கு அடிக்கடி வரும் கிம் ஜோங் நம், டாமன்சாராவில் உள்ள கொரிய உணவகம் ஒன்றில் வழக்கமாக உணவு உட்கொள்வார் என்று தகவல்கள் கூறுகின்றன.
சில நேரங்களில் தனது மனைவியுடன் மலேசியா வரும் கிம் ஜோங் நம், இங்கு 10 நாட்கள் தங்கிவிட்டு, மாச்சோ செல்வார் என்றும் அவரை நன்கு அறிந்தவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை காலை மாச்சோ செல்வதற்காக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் காத்திருந்தவரை இரு பெண்கள் விஷம் தெளித்துக் கொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் இருவரும் மலேசியக் காவல்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
கிம் ஜோம் நம் எதற்காக கொல்லப்பட்டார்? அந்த இரு பெண்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? என்ற விசாரணை தற்போது நடைபெற்று வருகின்றது.