சாய் பரத் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில், ஹிருஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி, விவேக், நரேன், அம்ஜத் கான், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
ரசித்தவை:
ஹிரிஷிகேஷ்,சஞ்சிதா ஜோடியின் நடிப்பு ரசிக்க வைக்கின்றது. படம் முழுவதும் ரசிகர்களை இருக்கையை விட்டு நகராமல் இழுத்துப் பிடித்து வைப்பது சஞ்சிதா தான்.
காமெடிக்கு நடிகர் விவேக்.. விவேக் இருப்பு படத்திற்கு மிகவும் பக்க பலமாக இருக்கின்றது. அந்தக் கதாப்பாத்திரத்தில் வேறு ஒரு புதுமுக நடிகரை நடிக்க வைத்திருந்தால், ரசிகர்களை இந்தப் படம் எந்த அளவிற்கு திருப்திபடுத்தியிருக்கும்? என்று தெரியவில்லை. காரணம், மிகவும் தொய்வான காட்சிகளில் கூட, விவேக்கின் அதர பழசான காமெடி வசனங்களும், முகபாவணைகளும் தான் ரசிகர்களை ஓரளவு நிமிர்ந்து உட்கார வைக்கின்றது.
இரண்டாம் பாதியில், அந்த வீட்டில் இதற்கு முன்பு நடந்த சம்பவங்கள், ஹிரிஷிகேஷ் உள்ளிட்டோரின் கண்களுக்கு அப்படியே தெரியும் காட்சிகளும், அதனை அவர்கள் உணரும் காட்சிகளில் நடிப்பும் மிகவும் அருமை. இரவு, வெளியே பகல் கான்செப்ட் புதுமை.
அனிருத் இசையில் பாடல்கள் கேட்கும் இரகம். ‘அள்ளாதே சிறகியே’, ‘கடவுளே’ பாடல்கள் அருமை. விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவு ஒகே.
சலிப்பு
பேய் படம் என்றாலே காட்டுக்குள் இருக்கும் பங்களாவாக தான் இருக்க வேண்டுமா? என்று கேட்கும் அளவிற்குப் பார்த்துப் பழகிய காட்சிகள்.
இருட்டு பங்களா, வேகமாக ஓடும் கடிகார முள், அங்கும் இங்கும் காற்றாய் நகர்ந்து செல்லும் பேய், டப்டப்டப்டப் என்று யாரோ கதவைத் தட்ட திறந்து பார்த்தால் தெரிந்தவர்களே நின்று கொண்டு ஏதாவது காரணம் சொல்வது, விளக்குகள் அணைந்து அணைந்து எரிவது என பேய் படத்தில் என்னவெல்லாம் இருக்குமோ அதெல்லாம் அப்படியே இருக்கிறது. எங்குமே வித்தியாசம் இல்லை.
அதற்கு ஏற்ப சிஜி வேலைபாடுகள் படத்தின் தரத்தை தடாலடியாகக் குறைத்துவிடுகிறது. அதில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் அல்லது பேயை வேறு ஏதாவது ஒரு வகையில் காட்சிப்படுத்தியிருக்கலாம்.
அனிருத்தின் பின்னணி இசை பல இடங்களில் எரிச்சலையே ஏற்படுத்துகிறது. காரணம், பயமுறுத்த வேண்டிய காட்சிகளில் எல்லாம் ஏதோ சாதனை செய்தது போல இசையை தெறிக்க விட்டிருப்பதும், காட்சிகளுடன் ஒன்றாத இசைத் துண்டுகளை பல இடங்களில் இணைத்திருப்பதும் சலிப்படைய வைக்கின்றது.
2 மணி நேரம் 10 நிமிட ஓடும் இந்த ‘ரம்’ திரைப்படத்தில், கொஞ்சம் விறுவிறுப்பு, கொஞ்சம் கிளுகிளுப்பு கொஞ்சம் நகைச்சுவை இவ்வளவு தான். இதைத் தவிர படம் பற்றி பெரிதாகச் சொல்லும் அளவிற்கு சுவாரசியம் இல்லை.
– ஃபீனிக்ஸ்தாசன்