Home Featured தமிழ் நாடு பழனிசாமியை எதிர்த்து திமுக வாக்களிக்கும்!

பழனிசாமியை எதிர்த்து திமுக வாக்களிக்கும்!

751
0
SHARE
Ad

stalin-2015-620x330சென்னை – புதிய தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி இன்று சனிக்கிழமை காலை நடைபெறும் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் தன் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் நிலையில், அந்த நம்பிக்கைத் தீர்மானத்திற்கு எதிராக திமுக வாக்களிக்கும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

நேற்று நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்குத் தலைமை வகித்த பின்னர் மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த மற்ற அண்மையச் செய்திகள் வருமாறு:

  • இன்று காலை (இந்திய நேரப்படி) 11.00 மணிக்கு நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெறுகிறது. ஏறத்தாழ 45 நிமிடங்களில் இந்த வாக்கெடுப்பு முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
  • சசிகலா அணியில் கூவத்தூரில் தங்கியிருந்த கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார், அங்கிருந்து வெளியேறி சொந்த ஊர் சென்று விட்டதாகவும், அதிமுகவில் சசிகலாவின் குடும்ப ஆதிக்கம் செலுத்தப்படுவதை எதிர்த்து நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அதிமுகவின் ஆதரவு பலம் தற்போது 122 ஆகக் குறைந்துள்ளது.
  • கோவை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் பதவியையும் அருண்குமார் ராஜினாமா செய்தார்.
  • மைலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் காவல் துறை அதிகாரியுமான நட்ராஜ் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவளிக்கப் போவதாக அறிவித்தார்.
  • இதற்கிடையில் அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என அதிமுக கொறடா அறிவித்திருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவுக்கு எதிராக வாக்களிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்படலாம். அதே சமயம் அவர்கள் கட்சி மாறியதாகவும், அவர்களின் சட்டமன்றத் தொகுதிகள் காலியானதாகவும்  அறிவித்து, அந்தத் தொகுதிகளில் மீண்டும் இடைத் தேர்தல் நடத்தப்படும் சாத்தியமும் நிலவுகின்றது.
  • தமிழக சட்டமன்றத்தில் இடம் பெற்றிருக்கும் 8 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நேற்று தமிழகக் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கைத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
#TamilSchoolmychoice

-செல்லியல் தொகுப்பு