கோலாலம்பூர் – கிம் ஜோங் நம் சடலத்தை வடகொரியா அனுப்பவதில் மலேசியா வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருவதாக மலேசியாவிற்கான வடகொரிய தூதர் காங் ஜோல் குற்றம் சாட்டியிருப்பதை தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் மறுத்தார்.
கிம் ஜோங் நம்மின் குடும்பத்தினரிடமிருந்து இன்னும் மரபணு மாதிரி கிடைக்காத காரணத்தால் தான், இந்த வழக்கு விசாரணையை முடிக்க முடியாமல் இருப்பதாக காலிட் தெரிவித்தார்.
“அவர்களுக்கு (வடகொரியா) வழக்கறிஞர்கள் ஆலோசனை கூற வேண்டும். மலேசியாவிற்கென சில சட்டங்கள் உள்ளன. மலேசியாவில் இருக்கும் போது அதனை அனைவரும் பின்பற்ற வேண்டும். அது வடகொரியாவிற்கும் பொருந்தும்” என்று காலிட் கூறினார்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு கோலாலம்பூர் மருத்துவமனையில் வடகொரிய தூதர் காங் ஜோல் செய்தியாளர்களிடம் பேசுகையில், கிம் ஜோங் நம்மின் சடலத்தைக் கொடுக்க மலேசியா வேண்டுமென்றே காலம் தாழ்த்துவதாகக் குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.