செர்டாங் – இந்திய உயர்கல்வி மாணவர்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வண்ணமும், அதனை வலுப்படுத்தும் வண்ணமும் புத்ரா மஇகாவின் ஏற்பாட்டில் 3 நாட்கள் நடைபெற்ற போட்டி விளையாட்டுக்களை மஇகாவின் தலைவரும்,சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அவர்கள் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 19-ஆம் தேதி, அதன் நிறைவு விழாவில் மஇகாவின் உதவித்தலைவரும், மிஃபாவின் தலைவருமான டத்தோ டி.மோகன் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு, வெற்றி பெற்ற யூ.டி.எம் (ஜோகூர்) அணியினருக்கு சுழற்கிண்ணத்தையும் வழங்கினார்.
நிறைவு விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த டி.மோகனை அழைத்து வரும் மஇகா புத்ரா பிரிவுத் தலைவர் யுவராஜா…
இந்தப் போட்டிகளில் 26 கல்லூரிகளில் இருந்து கிட்டதட்ட 500 மாணவர்களுக்கு மேல் கலந்து கொண்டிருந்தனர். ஆண்களுக்கு காற்பந்து போட்டிகளும், பெண்களுக்கு பூப்பந்து போட்டிகளும் நடத்தப்பட்டன.
காற்பந்துப்போட்டிகளில் 31 குழுக்கள் பங்கெடுத்த நிலையில் யூ.டி.எம் அணி இறுதியாட்டத்தில் லிம்-கோக் விங் அணியை வீழ்த்தி சுழற்கிண்ணத்தை வென்றது.
காற்பந்துப்போட்டிகளில் 2ஆம் இடத்தை லிம் கோக் விங் அணியும் 3ஆம் இடத்தை யூ.எஸ்.எம். நிபோங் திபால் அணியும், 4 ஆம் இடத்தை நீலாய் யுனிவர்சிட்டி அணியும் வென்றன.
வெற்றிக் கிண்ணத்துடன், போட்டியாளர்கள் சூழ டி.மோகன்…
பேட்மிண்டன் போட்டிகளில் முதல் இடத்தை யு.எம் அணியும், 2ஆம் இடத்தை பி.எஸ்.ஏ.எஸ் அணியும், 3 ஆம் இடத்தை யூ.பி.எம் அணியும், 4 ஆம் இடத்தை மணிப்பால் அணியும் வென்றன.
இந்தப்போட்டிகள் குறித்து டத்தோ டி.மோகன் குறிப்பிடுகையில் இந்திய மாணவர்களை ஓரிடத்தில் ஒன்று திரட்டியமைக்கு புத்ரா மஇகாவிற்கும், அதன் தலைவர் யுவராஜா மணியம் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
நினைவுக்காக ஒரு படம் – ஏற்பாட்டுக் குழுவினருடன் டி.மோகன்…
இந்தப் போட்டிகள் வருடா வருடம் அதிகமான மாணவர்களை கொண்டு நடத்தப்பட வேண்டும் என்றும், விளையாட்டுத் துறையின் வழி நமது சமுதாய மாணவர்களோடு அதாவது எதிர்காலத் தலைவர்களோடு ஓர் இணைப்புப் பாலத்தை உருவாக்கும் நடவடிக்கையாக இந்தப் போட்டிகள் அமைந்துள்ளன என்றும் மோகன் தனதுரையில் மேலும் கூறினார்.
நமது சமுதாய மாணவர்களுக்கு சரியான பாதையை காட்டும் கடப்பாடு மஇகாவிற்கு இருக்கிறது எனவும் அவர் கூறினார்.
நினைவுப் பரிசுகள் வழங்கும் டி.மோகன்….
கல்வி, விளையாட்டு, பொருளாதாரம் என அனைத்து நிலைகளிலும் நாம் முன்னேற்றம் கண்ட சமுதாயமாக உருமாற்றம் காண வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
மிஃபாவிற்கு ஆதரவாக மாணவர்கள் பலர் தொண்டூழியர்களாக பணியாற்ற விருப்பம் தெரிவித்திருந்தார்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் மோகன் கூறினார்.