சென்னை – பாஜக மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணிய சுவாமி, டுவிட்டரில் கூறும் கருத்துகள், பொதுமக்கள் முதல் பிரபலங்கள் வரை பலரையும் ஆத்திரமூட்டுவதோடு, நேரடியாகவே எதிர்த்து கருத்துகளைப் பதிவு செய்யும் அளவிற்குத் தள்ளியிருக்கிறது.
குறிப்பாக, ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது தமிழர்களை பொறுக்கிகள் என விமர்சித்தது, சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கருத்துக்களை வெளியிட்டது, அவரை தமிழக சிறைக்கு மாற்றும் படி கருத்துத் தெரிவித்தது போன்றவை மக்கள் மத்தியில் அவ்வளவு வரவேற்பைப் பெறவில்லை.
இதனிடையே, இப்போது நடிகர் கமல்ஹாசனுக்கும், சுப்ரமணிய சுவாமிக்கும் இடையில் டுவிட்டரில் வாக்குவாதங்கள் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
எந்த அளவிற்கு என்றால், சுப்ரமணிய சுவாமி, நடிகர் கமல்ஹாசனை முதுகெலும்பில்லாத கோழை என்று வர்ணிக்கும் வரை சென்றிருக்கிறது.
நடிகர் கமலும் அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக, “சு.சா போல் நான் முரட்டுத்தனமான கருத்துகளைக் கூற மாட்டேன். அவருக்கு வேண்டுமானால் எலும்பு இல்லாத உணவுகள் பிடிக்கலாம். ஆனால் நான் அப்படிப்பட்டவன் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே, அரவிந்த் சுவாமியும், சுப்ரமணிய சுவாமியை மறைமுகமாகத் தாக்கி டுவிட்டரில் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது, “எக்ஸ் (x) ஒய் (Y) மீது ஊழல் வழக்குத் தொடுத்தால், தீர்ப்பு வரும் வரையில் எக்ஸ், ஒய்யை ஊழல் செய்ததாகவே எண்ணுகிறது. ஆனால் அதே எக்ஸ், ஒய்யை பொது நாற்காலியில் அமர ஆதரவு தெரிவிக்கிறது. அது என்ன புதிராக இருக்கிறது?” என்று கூறியிருக்கிறார்.
இவர்களோடு, புதுமுக இயக்குநர்கள், சினிமா கலைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் சுப்ரமணிய சுவாமியின் திடீர் பல்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.