கோலாலம்பூர் – கிம் ஜோங் நம் கொலை தொடர்பாக, கோலாலம்பூரில் உள்ள வடகொரிய தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவரை காவல்துறை விசாரணை செய்யவிருப்பதாக தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் இன்று புதன்கிழமை அறிவித்தார்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வைத்து, வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜோங் நம் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 5 வடகொரிய நாட்டவரின் மீது சந்தேகம் கொண்டிருக்கும் மலேசியக் காவல்துறை, மேலும் 3 பேரை விசாரணை செய்யவிருக்கிறது.
அவர்களில், கோலாலம்பூரில் இருக்கும் வடகொரிய தூதரகத்தைச் சேர்ந்த இரண்டாம் நிலை அதிகாரி ஒருவரும், வடகொரிய விமான நிறுவனத்தின் பணியாளர் ஒருவரும் அடங்கும் என காலிட் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில், தூதரக அதிகாரியை விசாரணை செய்ய வேண்டும் என்று வடகொரிய தூதருக்கு மலேசியக் காவல்துறை கடிதம் எழுதியிருப்பதாகவும், அதற்கு வடகொரிய தூதரகம் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்றும் காலிட் கூறினார்.
அவ்வாறு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால், தாங்கள் வலுக்கட்டாயமாக அழைப்போம் என்றும் காலிட் தெரிவித்தார்.
இந்தக் கொலைச் சம்பவத்தில் 5 வடகொரிய நாட்டவர்கள் பின்புலமாக இருந்திருப்பதை காவல்துறை உறுதியாக நம்புகிறது என்று தெரிவித்த காலிட், அதில் நான்கு பேர் கொலை நடந்த அன்றே மலேசியாவை விட்டு வெளியேறிவிட்டதாகத் தெரிவித்தார்.