கோலாலம்பூர் – மலேசியாவில் இரு பெண்களால் கொலை செய்யப்பட்ட வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜோங் நம்மின் சடலத்தை அடையாளம் காட்ட அவரது உறவினர்கள், இன்னும் சில தினங்களில் மலேசியா வரவிருக்கின்றனர்.
இது குறித்து தேசியக் காவல்படையின் துணை ஆணையர் டத்தோஸ்ரீ நூர் ரஷித் இப்ராகிம் கூறுகையில், “இதுவரை (குடும்பத்தினர்) யாரும் வரவில்லை. இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் அவர்களில் ஒருவர் மலேசியா வருகிறார். அது குழந்தையாகவோ அல்லது உறவினராகவோ (மலேசியாவுக்கு அருகில் வசிப்பவர்கள்) இருக்கலாம்” என்று தெரிவித்தார்.
நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கையில், ஜோங் நம் இறப்பிற்கான காரணம் அடுத்த வாரம் தெரிந்துவிடும் என்றும், உறவினர் வந்து அடையாளம் காட்டினால் தான் அது ஜோங் நம் என்பது உறுதியாகும் என்றும் தெரிவித்தார்.