இந்தக் கட்சிக்கு “என் தேசம் என் உரிமை” எனப் பெயரிட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கெடுத்த இளைஞர்கள் தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வந்தனர்.
இந்த ஆலோசனைகளைத் தொடர்ந்து புதிய கட்சியைத் தொடங்க முடிவு செய்யப்பட்டு, கட்சியின் பெயர், கொடி அறிவிக்கப்பட்டது.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் எபினேசர், சத்யா, பிரவீணா, சுகன்யா, கார்த்தி, சுதந்திர தேவி, பிரகாஷ், பிரசாத் ஆகியோர் இணைந்து கட்சியின் பெயரை அறிவித்தனர். தேசியக் கொடியின் நிறத்துடன் அமைந்துள்ள கொடியின் நடுவில் இளைஞர் ஒருவர் அடிமை சங்கிலியை உடைப்பது போன்ற படமும் இடம் பெற்றுள்ளது.
புதிய கட்சியில் இணையம் மூலம் இதுவரை 6 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இணைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்தப்படப் போவதாகவும் இந்தக் கட்சியினர் அறிவித்துள்ளனர்.
என் தேசம் என் உரிமை கட்சியினர் மறைந்த முன்னாள் அதிபர் அப்துல் கலாமின் பெயரையும் முன்னிறுத்தி, அவரது கொள்கைகளின் அடிப்படையில் தங்களின் பணிகளை மேற்கொள்ளப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
தமிழக அரசியலில் நாளுக்கு நாள் ஏற்பட்டு வரும் திருப்பங்களின் ஒரு பகுதியாக, தற்போது ஜல்லிக்கட்டு இளைஞர்களின் புதிய அரசியல் கட்சி தோற்றம் கண்டுள்ளது.
திமுக-அதிமுக ஆதிக்கத்தில் இருக்கும் தமிழக அரசியல் களத்தில் புதிய கட்சி ஊடுருவ முடியுமா என்பதைக் காண அரசியல் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.