கோலாலம்பூர் – வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜோங் நம்மை விஷம் தேய்த்துக் கொலை செய்ததாக நம்பப்படும் இரு பெண்களில் ஒருவரான சித்தி ஆயிஷா, கலைத்துறையில் இணைந்து பிரபலமாக வேண்டும் என்ற கனவு கொண்டிருந்ததாக அவரது நெருங்கிய தோழி ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.
கொலை நடப்பதற்கு முந்தைய இரவு, சித்தி ஆயிஷா தனது பிறந்தநாளை, கோலாலம்பூரில் உள்ள பிரபல கேளிக்கை விடுதியில், தனது தோழிகளுடன் மிக மகிழ்ச்சியாகக் கொண்டாடியிருக்கிறார்.
மிக விரைவில் சித்தி ஆயிஷா இணையத்தில் பிரபலமாகப் போகிறார் என்பதை முன்வைத்தும் அக்கொண்டாட்டம் இருந்ததாக அவரது தோழி தெரிவித்திருக்கிறார்.
அதற்கு ஆதாரமாக அவர் ஊடகங்களிடம் காட்டிய காணொளி ஒன்றில், ‘பெரிய நட்சத்திரம்’ ஆகப் போகிறாய் என சித்தியின் தோழிகள் புகழ, அதற்கு சிரித்துக் கொண்டே சித்தி ஆயிஷா வெட்கப்பட்டு முகத்தை மூடிக் கொள்வது போல் காட்சிகள் பதிவாகியிருக்கின்றன.
“சித்தி ஆயிஷா பணத்திற்காகக் கொலை செய்தார் என்று கூறப்படுவதை நான் நம்ப மாட்டேன். காரணம் அது நடந்திருக்க வாய்ப்பே இல்லை. அவரை இதில் சிக்க வைத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன்”
“சித்தி மிகவும் எளிமையானவர். கலைத்துறையில் ஒருநாள் மிகப் பெரிய இடத்தைப் பிடிப்பேன் என அவர் நம்பிக் கொண்டிருந்தார். ஒரு வருடத்திற்கு முன்பே அவரது லட்சியத்தை நான் அறிவேன். சித்தி ஆயிஷா ஒரு அப்பாவி. கொலை செய்யப் போகிறோம் என்பது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை” என்றும் சித்தி ஆயிஷாவின் தோழி கூறியிருக்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த வழக்கில் இருந்து சித்தி ஆயிஷா விடுவிக்கப்பட்டு இந்தோனிசியாவில் அவரது குடும்பத்தினருடன் இணைய வேண்டும் என்று தான் நம்புவதாகவும் பெயர் கூற விரும்பாத அவரது தோழி தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே, தொலைக்காட்சி வேடிக்கை நிகழ்ச்சி என்று கூறி அதில் நடிப்பதற்கு சித்தி ஆயிஷாவிற்கு 400 ரிங்கிட் கொடுக்கப்பட்டதாகவும், அவரது கையில் கொடுக்கப்பட்டது குழந்தைகளுக்கான எண்ணெய் என்று கூறப்பட்டதாகவும் இந்தோனிசிய தூதரகம் தெரிவித்திருக்கிறது.