Home Featured நாடு சங்கப் பதிவகம்-மஇகா வழக்கு: 5 பேர் மட்டுமே விலகல்; 3 பேர் வழக்கைத் தொடர்கின்றனர்!

சங்கப் பதிவகம்-மஇகா வழக்கு: 5 பேர் மட்டுமே விலகல்; 3 பேர் வழக்கைத் தொடர்கின்றனர்!

1143
0
SHARE
Ad

mic-ros-combo-logo.without title jpgகோலாலம்பூர் – சங்கப் பதிவகம்-மஇகா மீது மஇகா பத்து தொகுதியின் முன்னாள் தலைவர் ஏ.கே.இராமலிங்கம் உள்ளிட்ட 8 பேர் தொடுத்துள்ள வழக்கு தற்போது மேல்முறையீட்டுக்காக, கூட்டரசு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த வழக்கின் வாதிகள் அனைவரும் வழக்கிலிருந்து விலகிக் கொண்டுள்ளனர் என சில ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

ஆனால், வழக்கைத் தொடுத்திருப்பவர்களில் உறுதியாக விலகியிருப்பவர்கள் இன்று வரை 5 பேர் மட்டுமே என சம்பந்தப்பட்ட தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

ஏ.கே.இராமலிங்கம், வி.கணேஷ், டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம், எம்.சத்தியமூர்த்தி, ஜோர்ஜ் அலெக்சாண்டர் பெர்னாண்டஸ், ஆர்.எம்.பிரபு, ஆர்.சிதம்பரம் பிள்ளை, டத்தோ எம்.வி.இராஜூ  ஆகியோரே வழக்கு தொடுத்திருக்கும் எண்மராவர்.

#TamilSchoolmychoice

இவர்களில் வி.கணேஷ்,  எம்.சத்தியமூர்த்தி, ஜோர்ஜ் அலெக்சாண்டர் பெர்னாண்டஸ், ஆர்.எம்.பிரபு, ஆர்.சிதம்பரம் பிள்ளை ஆகிய ஐவர் மட்டுமே வழக்கிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டார்கள் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எஞ்சிய மூவரான ஏ.கே.இராமலிங்கம், டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம்,டத்தோ எம்.வி.இராஜூ  ஆகியோர் இதுவரை வழக்கிலிருந்து விலகிக் கொள்ளாததால், வழக்கின் மேல்முறையீடு திட்டமிட்டபடி கூட்டரசு நீதிமன்றத்தில் தொடரும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 5 பிப்ரவரி 2016-இல் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட இந்த வழக்கில், மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், மஇகா உதவித் தலைவர்கள் டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், டத்தோ டி.மோகன்,  டத்தோ ஜஸ்பால் சிங், டத்தோ ஏ.சக்திவேல், வழக்கறிஞர் ஏ.வசந்தி, சங்கப் பதிவக தலைமை இயக்குநர் முகமட் ரசின் அப்துல்லா, சங்கப் பதிவக அதிகாரி அக்மால் யாஹ்யா ஆகிய எண்மரும் பிரதிவாதிகளாகப் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர்.

அடுத்த சில நாட்களில் இது தொடர்பான அறிக்கை வெளியிடப்படும், அல்லது பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தப்படலாம் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

வழக்கின் பின்னணி

மேற்குறிப்பிடப்பட்ட இந்த வழக்கு, பூர்வாங்க ஆட்சேபங்களின் அடிப்படையில்  கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தால் கடந்த 11 ஜூலை 2016-இல்  தள்ளுபடி செய்யப்பட்டது.

அந்தத் தீர்ப்புக்கு எதிராக இராமலிங்கம் குழுவினர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு (Court of Appeal) செய்திருந்த மேல்முறையீட்டை 10 ஜனவரி 2017-ஆம் நாள் விசாரித்த நீதிமன்றம் அந்த வழக்கை பூர்வாங்க ஆட்சேபங்களின்படி தள்ளுபடி செய்திருக்கக் கூடாது என்று கூறி, மீண்டும் அந்த வழக்கின் முழு விசாரணையும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடத்த வேண்டுமென தீர்ப்பு கூறியது.

இதனைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்புக்கு எதிராக பிரதிவாதிகள் தரப்பில் கூட்டரசு நீதிமன்றத்திற்கு (பெடரல் கோர்ட்) மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கின்றது.