Home Featured நாடு வடகொரிய ‘உயர்மட்டத் தலைவர்கள்’ வருகை: நிலைப்பாட்டில் உறுதியாக மலேசியா!

வடகொரிய ‘உயர்மட்டத் தலைவர்கள்’ வருகை: நிலைப்பாட்டில் உறுதியாக மலேசியா!

738
0
SHARE
Ad

subramaniam-dr-micபுத்ராஜெயா – கிம் ஜோங் நம்மின் உறவினரைத் தவிர வேறு யாரிடமும் அவரது உடலைத் தருவதற்கு மலேசிய அரசாங்கம் ஒப்புக் கொள்ளாது என சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார்.

வடகொரிய அரசு சார்பில் இருந்து உயர்மட்டத் தலைவர்கள் சிலர் மலேசியாவிற்கு வந்து, சம்பந்தப்பட்ட மலேசிய அமைச்சர்களைச் சந்தித்து இவ்விவகாரம் குறித்துப் பேசியிருப்பதையும் டாக்டர் சுப்ரா உறுதிப்படுத்தினார்.

எனினும், கிம் ஜோங் நம்மின் உறவினரிடம் மட்டுமே உடலை ஒப்படைப்பது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் மிக உறுதியாக இருப்பதாகவும் டாக்டர் சுப்ரா குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“அவர்கள் (வடகொரியத் தலைவர்கள்) என்னைச் சந்திக்கவில்லை. அமைச்சரவையில் மற்ற உறுப்பினர்களைச் சந்தித்தனர்” என்று டாக்டர் சுப்ரா இன்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

உடலைத் தரும் படி அவர்கள் கோரிக்கை விடுத்த போதும், மலேசிய அரசாங்கம் தனது சட்டதிட்டங்களின் படி தான் நடந்து கொள்ளும் என்றும் டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

“உதாரணமாக, உடலில் செலுத்தப்பட்ட நரம்பு விஷம் காரணமாகத் தான் (ஜோங் நம்) இறந்தார் என்பதைக் கண்டறிந்திருக்கிறோம். எனினும், இறந்தவரை அடையாளம் கண்ட பின்னரே உடலை தர முடியும். அதோடு, முறையாக அவரது உறவினர்களிடம் மட்டுமே உடலை ஒப்படைக்க முடியும். அதை மாற்றிக் கொள்ளமாட்டோம்” என்று டாக்டர் சுப்ரா செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த பிப்ரவரி 13-ம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2-ல் இரு பெண்களால் விஷம் தேய்த்துக் கொலை செய்யப்பட்ட வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜோங் நம்மின் உடலைப் பெற அவரது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் இதுவரை மலேசியாவிற்கு வரவில்லை.

மரபணு மாதிரி பெற்று அதனை வைத்து கிம் ஜோங் நம் தான் என அடையாளம் காணப்பட்ட பின்னரே உடலைத் தருவோம் என்பதில் மலேசியா உறுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.