கோலாலம்பூர் – கிம் ஜோங் நம் கொலை தொடர்பாக மலேசியக் காவல்துறையின் தடுப்புக்காவலில் இருந்த போது நடந்த விசாரணை ‘மிகவும் வலி’ மிகுந்ததாக இருந்ததாக வடகொரியாவுக்கு நாடுகடத்தப்பட்ட இரசாயன நிபுணர் ரி ஜோங் சோல் தெரிவித்திருக்கிறார்.
இப்படி ஒரு துயரத்தை தான் அனுபவித்ததற்காக மலேசியா மன்னிப்பு கேட்பதோடு, தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ரி ஜோங் சோல், ஜப்பானைச் சேர்ந்த முன்னணி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
மேலும், கிம் ஜோங் நம் கொலையில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் ரி ஜோங் சோல் உறுதியாகக் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், ரி ஜோங் சோலின் குற்றச்சாட்டை தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் மறுத்திருக்கிறார். ரி ஜோங் சோல் கூறுவது முட்டாள்தனமான ஒன்று என்றும் காலிட் தெரிவித்திருக்கிறார்.
தடுப்புக் காவலில் அவர், சட்டவிதிகளுக்கு உட்பட்டு தான் விசாரணை செய்யப்பட்டார் என்றும் காலிட் குறிப்பிட்டிருக்கிறார்.